ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘ராமானுஜன் கணக்கில் தோற்றாரா?’ என்ற கட்டுரையைப் படித்தேன்.
2005-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. மெரினா வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக மைய நூலகத்தின் தரைப் பகுதியில் ஆய்வேட்டுக் கூடம் அமைந்திருந்தது. கட்டிடத்தின் கடைசி உள்ளறையின் ஒரு பகுதியில் அமைந்திருந்த ஆய்வேட்டுக் கூடத்தில் எப்போதும் இருள் கவிந்து காணப்படும்.
அதன் ஒரு பகுதியில், பழைய பதிவேடுகளும் அலுவலக ஆவணங்களும் குவிந்துகிடக்கும். இக்குவியலில் கச்சிதமாக பைண்ட் செய்யப்பட்ட மூன்று கட்டையான குறிப்பேடுகள் கிடைத்தன. அவை கணிதமேதை ராமானுஜனின் குறிப்பேடுகள் என்னும் உண்மை தெரியவந்தது.
இதுகுறித்து நண்பர் ஒருவரிடம் தெரிவித்தேன். அவர் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு, அவற்றை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.
பின்னாட்களில் அந்த அறையில் உள்ள பதிவேடுகள் வேறு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டன. இப்போது அந்தக் குறிப்பேடுகள் எங்கே? அவை சென்னைப் பல்கலைக்கழகத்தால் பாதுகாக்கப்படுகின்றனவா? அவற்றை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி இணையத்தில் வெளியிட வேண்டும்; மூலக்குறிப்பேட்டை மக்கள் காண்பதற்கு ஏதுவாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆவணக்காப்பகம் ஒன்றை நிறுவ வேண்டும்.
- இரா. சித்தானை, ஆய்வு உதவியாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. (மதுரை வளாகம்)