சொந்த வீடு இணைப்பின் வாசகர் பகுதியில் இடம்பெற்ற ‘திண்ணைகள் எங்கே போயின?' கட்டுரை படித்தேன். அண்மைக் காலம் வரை உறவை வளர்க்கும் பேச்சுப் பள்ளியாகச் செயல்பட்டது திண்ணை. இன்றைய அறிவியல் வளர்ச்சி மனித மனங்களை முடக்கிப் போட்டுவிட்டதன் விளைவு, திண்ணைகள் மாயமாயின.
சொந்தபந்தங்களும், உற்றாரும் மற்றாரும் ஒன்றாய் மனம் விட்டுப் பேசி, பொழுதைப் போக்கிய அந்தக் காலத்தில், பகல் பொழுதில் திண்ணையும், இரவுப் பொழுதில் முற்றமும் பயன்பட்டன. காட்சி ஊடகங்கள் பெருகிய பின்னர், நான்கு சுவருக்குள்ளேயே பொழுது போய்விடுவதால் திண்ணைக்கும் முற்றத்துக்கும் தேவையில்லாமல் போய்விட்டது. அன்று பெண்கள் ஓய்வுப் பொழுதில் தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளைத் திண்ணையில் விளையாடினர். இன்று காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நெடுந்தொடர்கள் தொடர்கிறபோது இதற்கெல்லாம் நேரம் ஏது? முற்காலத்தில் திண்ணையில் தங்கியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அதற்கப்புறம்தான் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டார்களாம்.
அடுத்த தலைமுறை தங்க மட்டும் இடம் கொடுத்தது. ஆனால், இன்றைய தலைமுறையோ மற்றவர்களை வீட்டுப் பக்கமே நெருங்க விடுவதில்லை. அப்படியிருக்க, திண்ணையைப் பயன்படுத்திய நாம் பாக்கியசாலிகள். இன்றைய தலைமுறை அதனை இழந்துவிட்டது. நாளைய தலைமுறைக்கு படங்களில் மட்டுமே திண்ணை எஞ்சியிருக்கும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்