'சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்!' என்ற கட்டுரை படித்தேன். மலையளவு நடிப்புத் திறமை காட்டிய ஒரு மாபெரும் கலைஞனுக்குப் புகழாரம். அவரது நடிப்பைப் பார்க்கும்போது மெய்சிலிர்கிறது. 'வியட்நாம் வீடு' பிரஸ்டீஜ் பத்மநாபன் பாத்திரத்தில் அவர் காட்டிய மிடுக்கும், உயர் அதிகாரியிடம் இருக்க வேண்டிய கடுகடுப்பும் எவராலும் மீண்டும் காண்பிக்க இயலாது.
'தங்கப் பதக்கம்' எஸ்.பி. சௌத்ரியும், 'கெளரவம்' படத்து பாரிஸ்டர் ரஜனிகாந்தும் கம்பீர பாத்திரங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்திருப்பார் என்று நமக்குத் தெரியாது. கிரீடம் அணிந்து கட்டபொம்மனாய் சினிமாவில் சிவாஜி வந்த உருவம்தான் நம் மனக்கண்ணில் நிற்கிறது. எந்த ஒரு பாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறி நம்மைப் பிரமிக்க வைத்த சிவாஜிக்கு இணை சிவாஜியே!
திருவிளையாடலில் கடல் மண்ணில் நடக்கும்போது அவர் காட்டிய தனித்தன்மை அவருக்கு மட்டும்தான் வரும். அதே படத்தில் 'பாட்டும் நானே… பாவமும் நானே…' என்ற பாட்டின்போது தன் பெரிய கண்களை உருட்டிக் காண்பித்து, அகிலமெல்லாம் அசைவதை நிறுத்திக் காண்பித்தது இன்றும் மனக்கண்ணில் அசைபோட்டு ரசிக்கத் தக்க காட்சி,
உண்மையிலேயே அவர் நடிப்புத் துறையில் ஒரு மாபெரும் மலை.
அவர் மட்டும் அமெரிக்காவில் பிறந்திருந்தால் பல ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருப்பார். ஆனால், தமிழ்நாடு அவரை இழந்திருக்கும். அவர் தமிழனாகப் பிறந்து தமிழுக்கு சேவை செய்து நம் திரைத் துறைக்குப் பெருமை தேடித்தந்ததற்கு நமக்குப் பெருமை. நாம் என்றும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
- குடந்தை வெ. இராஜகோபாலன், சென்னை.