ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக, குழந்தை பெற்றுக்கொள்ளும்படி அவரை எந்த நீதிமன்றமும் நிர்ப்பந்திக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
கருவில் உள்ள குழந்தையைவிட அதைச் சுமக்கும் தாயின் விருப்பமும் மனநலனுமே முக்கியம் என்கிற நீதிமன்றத்தின் கருத்து, பெண்களின் மகப்பேறு உரிமையை உறுதிசெய்வதாக இருக்கிறது.
18 வயதுக்கு உள்பட்ட ஒருவருடன் ஏற்பட்ட உறவால் 15 வயதுடைய தன் மகள் கருவுற்றிருப்பதால் அதைக் கலைப்பதற்கு அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை ஒரு பெண் அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் பூயான் அடங்கிய இருவர் அமர்வு, மருத்துவரீதியான கருக்கலைப்புக்கு அனுமதித்துத் தீர்ப்பு வழங்கியது.
பாலியல் வன்முறையால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், குடும்பத்துக்குள் முறையற்ற உறவால் கருவுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் - பதின்பருவப் பெண்கள் உள்ளிட்ட எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவரீதியான கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021இல் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டம் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க வழிவகை செய்கிறது. ஆனால், 15 வயதுச் சிறுமியின் வயிற்றில் வளரும் கரு ஏழு மாதங்களைக் கடந்து விட்டதால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைச் சிறுமியின் தாய் நாடினார்.
30 வாரங்களைக் கடந்த நிலையில் கருக்கலைப்பை மேற்கொள்வது தாய் - சேய் இருவரது உயிருக்கும் ஆபத்தாக அமையலாம் எனவும், குழந்தை பிறந்த பிறகு மத்திய தத்தெடுப்பு வாரியத்தின் மூலமாகக் குழந்தையைத் தத்துக் கொடுத்துவிடலாம் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.
‘ஒருவரது உடல் சார்ந்த - குறிப்பாக இனப்பெருக்கம் சார்ந்த உரிமைகளில் முடிவெடுப்பது என்பது அரசமைப்புச் சட்டக்கூறு 21 வலியுறுத்தும் தனி உரிமை - அந்தரங்க உரிமையின் உட்கூறு.
குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என்றால் தத்துக் கொடுத்துவிடலாம் என்பதையும் இழப்பீடு கோரலாம் என்பதையும் ஏற்க முடியாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
தன் உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும் கருவைக் கலைக்க முன்வந்திருக்கும் பெண்ணின் உள்ளார்ந்த உணர்வுக்கு இத்தீர்ப்பின் மூலம் மதிப்பளித்திருக்கும் உச்ச நீதிமன்றம், ‘நாம் இப்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், யாரும் நீதிமன்றங்களை நாட மாட்டார்கள்.
சட்டவிரோதமான, முறையற்ற கருக்கலைப்புகள் நடைபெறக்கூடும்’ என்று குறிப்பிட்டிருப்பது, நம் சமூக அவலங்களை அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
திருமணமானவர்கள் மட்டுமே மருத்துவரீதியான கருக்கலைப்புக்குத் தகுதியானவர்கள் என்று இருந்த நிலையில், கருக்கலைப்புத் திருத்தச் சட்டம் 2021, விருப்பமற்ற கருவைக் கலைக்க அனைத்துப் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று உறுதிசெய்ததோடு அதற்குப் பெண்ணின் அனுமதி மட்டுமே போதும் என்றும் வரையறுத்துள்ளது.
15 வயதுச் சிறுமியின் எதிர்காலத்தை முன்னிட்டுத் தகுந்த மருத்துவப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கருக்கலைப்பை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மணமான பெண்களுக்கே கருப்பை உரிமை முழுவதுமாகக் கைகூடாத இந்தியச் சமூகத்தில், 15 வயதுச் சிறுமிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் பெண்கள் அனைவருக்குமான இனப்பெருக்க உரிமைக்கு வித்திட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அதேவேளையில், இதுபோன்ற முன்னோடித் தீர்ப்புகள் காகிதங்களில் மட்டுமே தங்கிவிடாமல் அனைத்துத் தளங்களிலும் அவை செயல்படுத்தப்படுவதும் அவசியம்.