சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏறக்குறைய 4 ஏக்கர் பகுதியில் செயல்பட்டுவரும் தமிழகச் சட்டமன்றம், தலைமைச் செயலகம், இதர அமைச்சகங்களின் அலுவலகங்கள் இட நெருக்கடியால் விரிவாக்க, மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டுவருகின்றன. கோட்டையின் பெரும்பகுதி பாதுகாப்புத் துறை, தொல்லியல் துறை வசம் இருப்பதால், அதற்கான ஒப்புதல் பெற இயலாத நிலை உள்ளது.
2001 – 2006 அதிமுக ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டன. அதற்கடுத்து, கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்திலும் சட்டப்பேரவை அமைக்கத் திட்டமிடப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம், சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது;
ஆனால், 2011இல் பொறுப்பேற்ற அரசு, அங்கு மருத்துவமனை செயல்படும் என்று அறிவித்தது. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கிண்டி ரேஸ் கோர்ஸ் வளாகம் உள்ளிட்ட சில இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவை எதுவும் செயல்வடிவம் பெறவில்லை.
இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடியில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் உள்ள கடற்கரையை முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தவும் மீன் வலைகளை உலர்த்தவும் பயன்படுத்திவருகின்றனர்.
பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை முன்னிலைப்படுத்தித் தங்களது வாழ்விடமும் வாழ்வாதாரமும் பறிபோகும் என்பது அவர்களது அச்சம். 2004இல் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலேயே தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. அடையாறு கழிமுகப் பகுதியாகவும் இருப்பதால், இங்கு மழை நீர் தேங்குகிற, வெள்ளம் ஏற்படுகிற சாத்தியமும் அதிகம்.
கடல்மட்ட உயர்வு பற்றிய ஒரு மதிப்பீட்டின்படி, வரும் 2100இல் சென்னை கடலோரத்தின் 71.6 ச.கி.மீ. பரப்பைக் கடல்நீர் சூழும் என்றும் அவற்றில் சில பகுதிகள் நிரந்தரமாக மூழ்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. சென்னை காலநிலை மாற்றத் திட்ட அறிக்கையில், கடற்கரையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவுவரை கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தை ஒட்டியுள்ள சாந்தோம் சாலையில் பள்ளிகள் இயங்கிவருவதால் காலை, மாலை வேளைகளில் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தகைய காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த அரசாணை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் வேறு இடத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்குமாறும் பலர் தெரிவிக்கின்றனர். பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள மீனவக் கிராம மக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் முடிவைப் பொறுத்து அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல், மேம்பாட்டு வசதிகளைக் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த சட்டமன்றம், தலைமைச்செயலகத்தை வேறிடத்துக்கு மாற்றுவது என்பது ஏற்கப்பட வேண்டியது. அதேநேரத்தில், மக்கள் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அரசின் முடிவுகள், செயல்பாடுகள் அமைந்தாக வேண்டியதும் அவசியம். அதற்கேற்ற வகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நகர்வு அமைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.