தலையங்கம்

பைக் டாக்சி: தீர்க்கமான கொள்கை முடிவு அவசியம்

செய்திப்பிரிவு

பைக் டாக்சி குறித்துக் கொள்கை முடிவு எடுக்கும்வரை அவற்றுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அதேநேரத்தில், மக்களிடையே பைக் டாக்சிகளுக்கான ஆதரவு அதிகரித்துவரும் சூழலில், அது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற குரல்கள் வலுத்துள்ளன.

பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தபோதும் தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ளன

. பைக் டாக்சி நிறுவனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், அவற்றின் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனைச் சுட்டிக்காட்டித் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுசெய்யப் போக்குவரத்து, நிதித் துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையப் பிரதிநிதிகள் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான விரிவான கொள்கை முடிவுகளை அரசு மேற்கொள்ளும் வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், அதனை மீறுபவர்கள் அபராதம் உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, ‘பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுமா?’ என்றும், ‘விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பைக் டாக்சிகள் அனுமதிக்கப்படுமா, நிராகரிக்கப்படுமா என்பது பற்றி உடனே தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மலிவான கட்டணம், குறைந்த பயண நேரம் உள்ளிட்டவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே பைக் டாக்சிகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மோட்டார் வாகனச் சட்டத்தில் இரு சக்கர வாகனங்களை வணிகரீதியாகப் பயன்படுத்துவது குறித்த அம்சங்கள் இல்லாதிருந்தது.

இந்நிலையில், 2018 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அளித்த பதிலில், ‘மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 72, 73இன் கீழ் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிப்பதாக’த் தகவல் இடம்பெற்றிருந்தது. தற்போதுவரை 16 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.

தற்போது உலகளவில் அதிக கிக் (gig) பணியாளர்கள் உள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. அவர்களில் ஏறக்குறைய 50% பேர் வேறு பணியுடன் சேர்த்து இதனைச் செய்துவருவதாகத் தெரியவந்துள்ளது.

குறிப்பாக மாணவர்கள், நிரந்தர வேலைவாய்ப்பு தேடுவோர் இதில் ஈடுபட்டுப் பொருளாதாரரீதியில் பயனடைந்து வருகின்றனர்.

ஆதலால், பணியாளர்களும் பயனர்களும் ஒருசேர அதிகரித்துவருகிற ஒரு தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

அதற்கு ஏற்பப் பயனர்களின் பாதுகாப்பு, வாகனப் பரிசோதனை, ஓட்டுநர்கள் மீதான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் வகையிலான கண்காணிப்பு தொடர்பாக விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பணியாளர்களும் மக்களும் பலனடையும் வகையில், இதுபற்றித் தமிழக அரசு உடனடியாகத் தமது முடிவுகளை அறிவித்திட வேண்டும்.

SCROLL FOR NEXT