தலையங்கம்

சிறிய வங்கிகள்... பெரிய எதிர்காலம்!

செய்திப்பிரிவு

சேவையில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. உள்ளூரில் மட்டும் செயல்படக் கூடிய, ‘சிறிய வங்கிகள்' தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகளை அது வெளி யிட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

வங்கிச் விவசாயத்துக்கு, சிறிய அளவிலான தொழில்களுக்குக் கடன் வழங்கும் வங்கிகளைத் தொடங்குவதற்கு மூலதன அளவு ரூ. 500 கோடி என முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, ரூ. 100 கோடி இருந்தால் போதும் என ரிசர்வ் வங்கி முடிவுசெய்து அறிவித்துள்ளது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள், புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் ஆகியோருக்கு இந்த வங்கிகள் உதவிகரமாக இருக்கும். வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேமிப்புகள் மற்றும் கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த சிறிய வங்கிகளும் மேற்கொள்ளும். ஆனால், இவற்றின் செயல்பாட்டு எல்லை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே இருக்கும். இத்தகைய வங்கிகளைத் தொடங்குவதில் அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ), விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்றவையும் இந்த சிறிய வங்கிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம். வங்கித் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தனிநபரும் இத்தகைய வங்கிகளைத் தொடங்கலாம். வங்கியல்லாத நிதிநிறுவனங்கள், உள்ளூர் வங்கிகள் ஆகியவையும் சிறிய வங்கிகளாக மாறிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வங்கிகளில் செயல்பாட்டுக் கணக்கு ஏதும் இல்லை என்ற நிலையில், சிறிய வங்கிகளைத் திறக்க அரசு உத்தேசித்திருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், அந்நிய நேரடி முதலீடு என்ற விஷயத்தில் நிர்வாக முறைகேடுகளும், திட்டமிட்டு ஏமாற்றுவதும், சாதாரணச் சேவைக்கு வரம்பில்லாமல் சேவைக் கட்டணங்களை வசூலிப்பதும் நடைபெறாமல் அரசு கண்காணிப்பது அவசியம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், முதியோர் ஓய்வூதியம், விதவையர் ஓய்வூதியம், அரசின் சிறப்பு உதவித் திட்டங்கள் போன்றவற்றுக்கான நிதியை உரிய பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க, புதிதாக உருவாகவிருக்கும் சிறிய வங்கிகளை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிகுந்த பொருட் செலவில் தொடங் கப்பட்ட ‘ஆதார்' அட்டை வழங்கும் திட்டத்தை அரைகுறையாகக் கைவிடாமல், அந்த அடையாள எண்ணையே அங்கீகரிக்கப்பட்ட எண்ணாக்கி, பயன்களை நேரடியாக வழங்குவதற்குப் பயன்படுத்தலாம்.

சிறுசேமிப்புகள், மாதாந்திரச் சேமிப்புக் கணக்குகள் காரணமாக, அஞ்சல் நிலையங்கள் மக்களிடையே ஒருகாலத்தில் பிரபலமாக இருந்தன. கிராமப் பகுதிகளில் மக்களோடு அவை நெருக்கமாகச் செயல்பட்டன. சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அவற்றில் முகவர்களாகப் பணியாற்றிவந்தனர். வேலைவாய்ப்பு, சேமிப்பு என்று இருவகையிலும் பெரும் பங்களிப்பு செய்துவந்த அஞ்சல் நிலையங்கள் இப்போது களையிழந்துவிட்டன. தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறிய வங்கிகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் சேமிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு வகையிலும் அஞ்சல் நிலையங்களின் வெற்றிடத்தை நிரப்பும் என்று நம்பலாம்.

SCROLL FOR NEXT