தலையங்கம்

தலையங்கம்: மின் துறையில் ‘சௌபாக்கியம்’ ஏற்படுமா?

செய்திப்பிரிவு

அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு தரப்படும் என்று அரசுகள் 70 ஆண்டுகளாக அளித்துவரும் வாக்குறுதியின் ஒரு பகுதியாக ‘சௌபாக்கியா’ திட்டத்தை அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு ரூ.16,000 கோடிக்கும் மேல் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2005-ல் தொடங்கிய ‘ராஜீவ் காந்தி கிராமீன் வித்யுதிகரண் யோஜனா’ மற்றும் 2015-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கிய ‘தீன்தயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனா’ ஆகிய இரண்டின் நீட்சிதான் சௌபாக்கியா திட்டம்.

இத்திட்டத்தின்படி, ‘மின் இணைப்பு பெற்றுவிட்டது’ என்று ஏற்கெனவே அரசால் சான்றுரைக்கப்பட்ட கிராமங்களில் உள்ள ஏழைகளின் வீடுகளுக்குக்கூட மின் இணைப்பு வழங்கப்படும். ஒரு கிராமத்தில் அல்லது குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் 10% வீடுகளுக்கு மின் இணைப்பு இருந்தால் அந்தக் கிராமம் மின் இணைப்பு பெற்ற இடமாக அறிவிக்கப்படுகிறது. ஏழைகளின் வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு தரும் இந்தத் திட்டமானது, மின்சாரக் கட்டணத்தைத் தொடர்ந்து செலுத்துவதற்கான பொருளாதார வசதி குறித்து ஏதும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஏழைகளின் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு தருவது வரவேற்கத்தக்கது. அதே சமயம் மின் கட்டணம் ஓரளவுக்கு மேல் உயர்ந்தால் அதனால் ஏற்படும் நிதிச்சுமையை அவர்களால் தாங்க முடியாது. அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கி, அனைவரும் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தினால் எல்லா நுகர்வோர்களுக்குமே மின் கட்டணம் குறையும்.

2009-10-ம் ஆண்டில் நிலக்கரியை மூலப் பொருளாகப் பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் நிறுவுதிறனில் 77.5%-ஐ பயன்படுத்தின. 2016-17-ல் இது 59.88% ஆகக் குறைந்துவிட்டது என்று மத்திய மின்சார ஆணையம் தெரிவிக்கிறது. மாநில மின்வாரியங்களின் நிதிநிலைமை மோசமாவதுதான் இதற்குக் காரணம். மாநில மின்வாரியங்களின் மின்விநியோகக் கட்டமைப்பைத் திருத்தியமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட்ட ‘உஜ்வல்’ உறுதித் திட்டமும் வெற்றி பெறவில்லை. விவசாயம், நெசவு, ஏழைகள் என்று நுகர்வோர்களில் கணிசமானவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் முடிவுகளை மாநில மின்வாரியங்கள் அமல்படுத்துவதால் அவற்றின் நிதி நிலைமை கவலைதரும் அளவுக்குக் குறைந்துவிட்டன.

லாபகரமான விலையில் விற்கும் சுதந்திரம் தங்களுக்குத் தரப்படாததால் மின்விநியோக நிறுவனங்கள், அதிக மின்சாரம் வேண்டும் என்று கேட்கும் ஆர்வத்தை இழந்துவிட்டன. இதனால்தான் பல மின்னுற்பத்தி நிறுவனங்களின் திறன் குறைந்துகொண்டே வருகிறது. இதன் விளைவாக முதலீட்டாளர்களும் மின்னுற்பத்தித் துறையில் முதலீடு செய்ய ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். இந்திய மின்னுற்பத்தித் துறையை பாதிக்கும் இந்த அம்சங்களையெல்லாம் ‘சௌபாக்கியா’ தொடவேயில்லை. இந்நிலையில், ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பு எனும் முழக்கங்களுடன் தொடங்கப்படும் இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

SCROLL FOR NEXT