அதிமுகவைச் சேர்ந்த 18 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்திருப்பதன் மூலம், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் தனபால். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மனு கொடுத்ததைத் தொடர்ந்து உருவான ஊகங்களைத் தனது இந்த உத்தரவின் மூலம் நிஜமாக்கியிருக்கிறார்.
சபாநாயகரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சட்ட மன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 233-லிருந்து 215 ஆகக் குறைந்துள்ளது. எனவே, தேவையான பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 117-லிருந்து 108 ஆகக் குறைந்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்குச் சாதகமாகவே அமைந்திருக்கிறது. ஏழு மாதங்களைக் கடந்திருக்கும் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை நீட்டிப்பதற்கான முயற்சியாகத்தான் சபாநாயகரின் நடவடிக்கையைப் பார்க்க முடிகிறது. முதலமைச்சர் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தால், இந்த அசாதாரணச் சூழல் உருவாகியிருக்காது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்க்கட்சியான திமுக அஞ்சியது. அதன் காரணமாகத்தான், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. செப்டம்பர் 20-க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, சபாநாயகர் பிறப்பித்திருக்கும் உத்தரவு நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. ஒரு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சியின் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டாலே, அவர்கள் கட்சி உறுப்பினர் நிலையிலிருந்து தாங்களாக முன்வந்து விலகிவிட்டார்கள் என்று பொருளா? அவ்வாறு செய்வதால் அவர்களை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்க முடியுமா என்பதையெல்லாம் நீதிமன்றம் முடிவுசெய்யும்.
ஏற்கெனவே, கர்நாடக சட்ட மன்றத்தில் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி ஆட்சியில் தொடர்வதற்கு ஆதரவளிக்காத 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்வது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 2011-ல் பால்சந்திரா எல்.ஜர்கிஹோலி எதிர் பி.எஸ்.எடியூரப்பா வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது. கொறடா உத்தரவை மீறியிருந்தால் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்துக்கான சூழல் ஏற்படும்.
கடந்த ஆண்டில், உத்தராகண்டில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் இதுபோன்ற சிக்கல் எழுந்தது. காங்கிரஸைச் சேர்ந்த ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டதைத் தொடர்ந்து அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. அந்தப் பிரச்சினையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியான பாஜகவினருடன் சேர்ந்து ஆளுநரைச் சந்தித்தார்கள். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் தொடர்புள்ளது என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. இந்தப் பிரச்சினையில் சட்டரீதியாகவும் அரசியல் சட்ட அடிப்படையிலும் எழுகின்ற கேள்விகளை நீதிமன்றம் முடிவுசெய்யும். ஆனால், தமிழகத்தில் அரசியல் விழுமியங்கள் வீழ்ந்துவிட்டன என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. ஆளும் அதிமுக அரசு, பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றிபெறலாம். ஆனால், தார்மிக அடிப்படையிலிருந்து அது விலகிவிட்டது!