தலையங்கம்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: இன்னும் மிச்சமிருக்கும் நீதி

செய்திப்பிரிவு

மு

ம்பை மாநகரில் 1993 மார்ச் 12-ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெளிநாட்டில் சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள், மக்கள் அதிகளவில் கூடுகின்ற 12 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஒரு மாநகரத்தின் பாதுகாப்பில் இருக்கும் போதாமைகளை அரசுக்கு உணர்த்திய சம்பவம் இது. கடந்த வாரத்தில் இரண்டாம் கட்ட விசாரணைகள் முடிந்து தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், இன்னும்கூட அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் முழுமையாக விசாரிக்கப்பட்டுத் தண்டனை அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களையும் சாட்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒவ்வொரு விசாரணையின்போதும் ஆஜர்படுத்துவதே காவல்துறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. அப்போது கிடைத்த குற்றவாளிகளைக் கொண்டு தொடங்கிய வழக்கு விசாரணை முடிய 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. 100 பேர் குற்றவாளிகள் என்று முடிவானது. அவர்களில் ஒருவர் 2015-ல் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டது; 28 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து 2005-ல் அபு சாலேம் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார்; 2007-ல் இதே வழக்கில் அடுத்த தொகுப்பு விசாரணை நடந்தது. கடந்த வாரம் இவ்வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார், இன்னொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு கடந்த ஜூன் மாதம் இறந்துவிட்டார்.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பங்களிப்புக்கு ஏற்ப தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கூறியதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியாக நடந்துகொள்ளவில்லை என்றாகிவிடும். ஆனால், இந்த வழக்கு தடா சட்டப்படி நடந்தது என்பதும் தடா சட்டத்தின் ஒரு கூறு, மூத்த அதிகாரிகள் எதிரில் அளித்த சாட்சியத்தை, ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுவதும் உறுத்தலானது.

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கான ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் அனுப்பி வைத்ததே அபு சாலேம்தான் என்றாலும், ‘அதிகபட்சம் 25 ஆண்டுகள் மட்டுமே அவருக்குச் சிறைத்தண்டனை விதிப்போம்’ என்று போர்ச்சுகலுக்கு வாக்குறுதி அளித்து அபு சாலேமை அழைத்து வந்ததால் அவர் மரண தண்டனையிலிருந்து தப்பியிருக்கிறார்.

இத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வெளிவரும்போது நீதி வழங்கப்பட்டது என்ற திருப்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட வேண்டும். ஆனால், இப்போது இவ்வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓரளவுக்குத்தான் நிம்மதி ஏற்பட்டிருக்கும். இந்தப் படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோர் சிக்கினால்தான் இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து, நீதி நிலைநாட்டப்படும்!

SCROLL FOR NEXT