தலையங்கம்

கவுரி லங்கேஷ்: உரிமைகளுக்காக ஒலித்த குரல்!

செய்திப்பிரிவு

மூகச் செயல்பாட்டாளரும் துணிச்சல் மிக்க பத்திரிகை யாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, நாட்டின் பல பகுதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவர் கொல்லப்பட்ட விதம் கொடூரமானது. அவருடைய வீட்டுக்கு அருகிலேயே காத்திருந்து, மிகவும் அருகிலிருந்தபடி நெஞ்சிலும் நெற்றிப்பொட்டிலும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். கைவிரல் ரேகையோ இதர தடயங்களோ கிடைக்க வாய்ப்பில்லாமல் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டிருக்கின்றனர். கொலை செய்வதையே தொழிலாகக் கொண்ட கும்பலின் வேலை இது என்று தெரிகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்திருக்கின்றனர்.

‘கவுரி லங்கேஷ் பத்ரிகே’ என்ற வாராந்தரியின் ஆசிரியர் கவுரி. மூடப் பழக்கவழக்கங்களை எதிர்ப்பதில் சமூக நீதிக்காகப் போராடுவதில், தலித்துகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதில் முன்னணி யில் இருந்தார். அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டு வதுடன் அவற்றைக் கண்டிக்கவும் தயங்காதவர். நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கான அரசின் நடவடிக்கைகளால் பழங்குடிகள் பாதிக்கப்பட்டதைச் செய்தியாக வெளியிட்டார். பழங்குடிகளின் நிலையை அரசுக்கு எடுத்துச் சொல்லி, நக்சலைட்டுகள் சரண் அடைந்து பொது நீரோட்டத்தில் மீண்டும் இணைய வழிவகுத்தார். விவசாயிகள், தலித்துகளுக்கு ஆதரவாக இடைவிடாமல் குரல் கொடுத்தார். இந்துத்துவக் குழுக்களின் ஆதிக்கம் வளர்வதை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, விழிப்புணர்ச்சி ஊட்டினார். முற்போக்கு அமைப்புகளுக்குத் தார்மிக ஆதரவு அளித்ததுடன், ஆட்சியில் இருப்பவர்களின் செயல்களையும் தொடர்ந்து கவனித்து, தவறுகளை அம்பலப்படுத்தினார்.

கவுரியின் மறைவு பத்திரிகை உலகுக்குப் பேரிழப்பு. பல்லாண்டுகளுக்கு முன்னால் சமூகச் செயல்பாட்டாளர் சஃப்தர் ஹஷ்மி, சமீபத்திய ஆண்டுகளில் எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படுகொலைகள் சமூகம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டிய பயங்கரங்களாகும். சமூகத்தின் மதிப்பைப் பெற்ற சுதந்திரச் சிந்தனையாளர்களைச் சகித்துக்கொள்ள முடியாத சக்திகள், சட்டத்தின் கரம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அதற்காக அஞ்சாமல், தாங்கள் நினைத்தபடி நினைத்தவர்களைக் கொன்று அழிக்கும் அளவுக்கு கொடூரம் வாய்ந்ததாக இருக்கின்றன. இந்தப் படுகொலைகள் கவுரியைப் போன்ற பிற சமூகச் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கைகளாகும்.

மத்திய அரசையும் இந்துத்துவத்தையும் விமர்சித்து எழுதும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அடித்தட்டு - பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. பத்திரிகைச் சுதந்திரத்துக்கான சர்வதேசத் தர வரிசையில் இந்தியா 133-வது இடத்திலிருந்து 136-க்குச் சென்றுவிட்டது என்ற தகவல் வெறுமனே எண்ணிக்கை சார்ந்தது அல்ல; இந்தியாவின் பொதுப்போக்கைப் பிரதிபலிக்கும் உண்மை அது.

கவுரியைக் கொன்றவர்களை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மத்திய அரசின் பொறுப்பும்கூட. எழுத்துக்கு எதிராகத் துப்பாக்கியை நீட்டுபவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால்தான் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் ஆரோக்கியமான கலாச்சாரம் இங்கே புத்துயிர் பெறும்!

SCROLL FOR NEXT