தலையங்கம்

ஏஞ்சலா மெர்க்கல் வெற்றி ஏன் உலக அளவில் முக்கியமானது?

செய்திப்பிரிவு

ஜெ

ர்மனி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக அதிபராகியிருக்கிறார் ஏஞ்சலா மெர்க்கல். அதேசமயம், அவரது கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பலம் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதும், வலதுசாரிக் கட்சியான ஏ.எஃப்.டி. கட்சி (ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி) நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருப்பதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஜெர்மனியின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம். ஏ.எஃப்.டி. கட்சிக்கு 12.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. சமரசத்திலும், இணக்கமான போக்கிலும் நம்பிக்கை வைத்திருக்கும் ஜெர்மனிக்கு எழுந்திருக்கும் முக்கியமான சவாலாக இது பார்க்கப்படுகிறது.

இயல்பாகவே எச்சரிக்கை உணர்வுடனும் நடைமுறைத் தன்மையுடனும் செயல்படுபவரான ஏஞ்சலா மெர்க்கல், கடந்த காலத்தில் நாஜிகள் மூலம் உருவான ஜெர்மனி மீதான பிம்பத்தைத் மாற்றியமைப்பதில் வெற்றி கண்டவர். அவரது சமரச நடவடிக்கைகள் சில சமயங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கே சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது இந்தப் போக்கு சித்தாந்த ரீதியாகத் தெளிவற்றது என்று கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கும் ஒரு தந்திரமாகவே மெர்க்கல் அதைக் கையாண்டார். தீவிர வலதுசாரிகளிடமும் அவர் இணக்கமாக நடந்துகொண்டதை வைத்து மட்டும் அவரைக் குற்றம்சாட்ட முடியாது. பல ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பலையை மத்திய நிலைசார்ந்த வலதுசாரிக் கட்சிகள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறது.

அரசியல் எதிரிகளான கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சிக்கும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சிக்கும் இடையில் மகா கூட்டணி அமைந்தது, தீவிர வலதுசாரிக் கட்சியின் பக்கம் கணிசமான வாக்காளர்களைத் தள்ளியது என்று சொல்லலாம். மிக முக்கியமாக, ஜெர்மனியின் பிரதான அரசியல் கட்சிகளான கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சிக்கும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சிக்கும் 1970-களில் 90%ஆக இருந்த ஆதரவு என்பது, தற்போது 50% ஆகக் குறைந்திருப்பது வாக்காளர்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் காட்டுகிறது.

கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன், கிரீன்ஸ், ஃப்ரீ டெமாக்ரடிக் கட்சி (எஃப்.டி.பி.) ஆகியவை இணைந்து ஜமைக்கா கூட்டணி (இக்கட்சிகளின் கொடி வண்ணங்கள் சேர்ந்து ஜமைக்கா நாட்டின் தேசியக் கொடியில் இருக்கும் வண்ணங்களைப் போல் இருப்பதால் இப்படிக் குறிப்பிடப்படுகிறது) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சோஷியல் டெமாக்ரடிக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்று தெரிகிறது. சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நீண்டகாலம் பதவியில் நீடிக்காத ஒரு சூழலில், நான்காவது முறையாக அதிபராகியிருக்கும் ஏஞ்சலா மெர்க்கல், தனது அரசியல் வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது வெற்றி ஜெர்மனிக்குள் மட்டுமல்லாமல், உலக அளவிலும் நிம்மதியைத் தரும் என்று ஓராண்டுக்கு முன்னர்கூட அவர் உட்பட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ‘அமெரிக்காதான் பிரதானம்’ எனும் கொள்கையுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இயங்கிவரும் நிலையில், மெர்க்கல்லைப் போன்ற ஒரு தலைவர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை!

SCROLL FOR NEXT