தமிழ் இளைஞர்களைத் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும் அதன்வழி அவர்களை அதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லவும் ‘தி இந்து’ மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தமிழகத்தின் ஏழு ஊர்களில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்!’ நிகழ்ச்சிகள் நடந்துமுடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களும் பெற்றோரும் நம் வாசகர்களும் கொடுத்த ஆதரவு மகத்தானது. ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். மேலும், பல ஊர்களில் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வாசகர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, அடுத்தகட்ட நிகழ்ச்சிகள் தொடர்பில் இப்போது ‘தி இந்து’ யோசித்துவருகிறது. இந்நிகழ்ச்சிகளின்போது நடந்த கலந்துரையாடல்களின் வழி ஆசிரியர் குழுவினர் புரிந்துகொண்ட முக்கியமான இன்னொரு உண்மை, ‘தி இந்து’ நடுப்பக்கம் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் விவாதவெளியாக உருவெடுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இளைய தலைமுறையின் பார்வைகளை வடிவமைக்கக்கூடிய இடத்திலும் இருக்கிறது என்பது! இளைய வாசகர்களுடனான உரையாடல், பல வகைகளில் பத்திரிகையை அவர்களுக்கேற்ப வடிவமைக்க ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டுகிறது என்பதை இங்கே மகிழ்ச்சியோடு குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தக் கலந்துரையாடல்களின்போது, மாணவர்கள் முன்வைத்த முக்கியமான வேண்டுகோள்களில் ஒன்று, ‘தி இந்து’ குழுமத்திலிருந்து ஆங்கிலத்தில் வெளியாகும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ‘ஃப்ரண்ட்லைன்’, ‘பிஸினஸ் லைன்’, ’ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து வெளியிடும் கட்டுரைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பது. நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்தே நடுப்பக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரையையேனும் அன்றாடம் வெளியிடுவது எனும் நடைமுறையை ஏற்கெனவே நாம் உருவாக்கியிருக்கிறோம். இப்போது, எம் இளைய வாசகர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று முதலாக மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துகிறோம். இனி நடுப்பக்கங்களில் சர்வதேசப் பத்திரிகைகள் மற்றும் ‘தி இந்து’ குழுமப் பத்திரிகைகள் ஆகியவற்றில் வெளிவரும் அரசியல்சார் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகளோடு, கூடுதலாக மாணவர்களின் மையப்படுத்தும்வகையில் சிறிய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் வெளியாகும். அதேசமயம், தமிழில் நேரடியாக எழுதப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைவும் இருக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு செய்திகளையும் தகவல்களையும் மாற்றிக்கொடுப்பது மட்டுமில்லை, அயல்மொழிகளிலிருந்து வந்துசேரும் புதிய பார்வைகளின் வழியாக ஒரு சமுதாயத்தின் அறிவியக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கக்கூடியது. அதன் அவசியத்தை உணர்ந்து தமிழில் மொழிபெயர்ப்புகளை மேன்மேலும் வளப்படுத்துவோம். தமிழை மேலும் செழுமைப்படுத்துவோம்!