சுமார் 82 ஆண்டுகளுக்குப் பிறகு, மேட்டூர் ஸ்டான்லி அணையில் தூர்வாரும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் வரலாற்று வறட்சி ஏற்பட்டிருக்கும் சூழலில், இதனூடாகவே மேட்டூர் அணை உட்பட நீர்நிலைகளைத் தூர்வார முடிவெடுத்துள்ள முதலமைச்சர் கே.பழனிசாமி பாராட்டுக்குரியவர். ரூ.100 கோடி செலவில் 1,519 நீர்நிலைகளில் மராமத்துப் பணிகள் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக ரூ.300 கோடி செலவில் 2,065 நீர்நிலைகளைச் சீரமைக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். கால நிலை மாற்றங்களும் அதன் விளைவாகப் பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவதும் தவிர்க்க இயலாதது. ஆனால், அதையும்கூட அரிய வாய்ப்பாகக் கருதி நீர்நிலைகளில் தூர்வார்வது, கரைகளைச் செப்பனிடுவது ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்துவரும் ஆண்டுகளில் நீர்நிலைகளை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
தெலங்கானா மாநிலத்தில் ‘மிஷன் காகதீயா’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான நீர்நிலைகள் மீட்டுருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திரத்தில் ஒரு சொட்டு மழை நீரும் வீணாகாத வகையில் ஏரி, குளங்களைச் சீரமைக்கவும் நீர்வரத்துப் பாதைகளைச் செப்பனிடவும் பணிகள் நடந்துவருகின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில், தமிழக அரசு மிகவும் காலம் தாழ்த்தியே, நீர்நிலைகளை நோக்கித் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலைநாட்களை நீட்டித்து, நீர்நிலைகளை மேம்படுத்தும் குடிமராமத்துப் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.
அணைகளில் நீர் மட்டுமே தேங்கி நிற்பதில்லை. நதியின் போக்கில் நீரோடு மண்ணும் வந்து அணையில் தேங்கிவிடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் அணையில் தேங்கி நிற்கும் மண்ணும் சிறு அளவிலான கற்களும், நீண்ட காலம் கழித்து, அணையின் கொள்ளளவையே பாதிக்கக்கூடியதாக மாறிவிடும். எனவே, வறட்சி என்பது தூர்வாரும் பணிகளைச் செய்வதற்காக இயற்கையே உருவாக்கித் தரும் ஒரு வாய்ப்பு. தமிழக அரசு அத்தகைய வாய்ப்பை உரிய காலத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திட்டமிட்டபடி தூர்வாரும் பணிகள் முடிந்த பிறகு, அணையில் கூடுதலாக 10 % வரையில் நீர் இருப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 மாவட்டங்களின் நீர்ப்பாசனத்துக்கு மேட்டூர் அணையே ஆதாரமாக இருக்கும் நிலையில், இந்தப் பணி மிகவும் அவசியமான ஒன்று. ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணம் ஏதுமின்றி எடுத்துச் செல்ல அனுமதித்துள்ள அரசின் முடிவும் வரவேற்புக்குரியது. நீர்நிலைகள் பராமரிப்பு தொடரட்டும்!