தலையங்கம்

ஹமாஸ் இயக்கத்தின் ஆக்கபூர்வ மாற்றம்!

செய்திப்பிரிவு

பாலஸ்தீனப் போராளி இயக்கமான ஹமாஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அரசியல் கொள்கை அறிக்கை, இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் சர்ச்சைக்குரிய தனது முந்தைய அணுகுமுறைகளை அது மாற்றிக்கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது. தனது கொள்கைகள், நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் மற்ற இயக்கங்கள் மற்றும் சர்வதேசச் சமுதாயத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவந்த நிலையில், ஒரு புதிய மாற்றத்துக்கு ஹமாஸ் தயாராகியிருக்கிறது.

தங்கள் போர் யூத மக்களுக்கு எதிரானதல்ல; பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் யூத தேசியவாதிகளான ஜியோனிஸ்ட்டுகளுக்கு எதிரானதுதான் என்று தற்போது கூறுகிறது ஹமாஸ். தாங்கள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடிய புரட்சிகர இயக்கம் அல்ல; பாலஸ்தீனத்தின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம் மட்டுமே என்றும் ஹமாஸ் குறிப்பிட்டிருக்கிறது. மிக முக்கியமாக, 1967-ல் வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி, பாலஸ்தீன தேசத்தை உருவாக்குவதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. எனினும், ஹமாஸின் இந்த மாற்றத்தை இஸ்ரேல் நிராகரித்திருக்கிறது. உலகத்தை ஏமாற்ற ஹமாஸ் முயற்சிப்பதாகக் கூறியிருக்கிறது.

ஹமாஸ் உண்மையிலேயே தனது ஆவேசமான நிலைப்பாட்டைத் தணித்துக்கொண்டிருக்கிறது; எனவே அமைதிக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் வைத்துக்கொண்டால், அதைச் சர்வதேசச் சமுதாயம் கவனிக்காமல் இருக்க முடியாது. 1967-ல் வரையறை செய்யப்பட்ட எல்லையை முதல் முறையாக ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம், இஸ்ரேல் இருப்பதையும் ஹமாஸ் அங்கீகரித்திருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதேசமயம், இஸ்ரேலை உடனடியாக அங்கீகரித்திருக்கிறது என்றோ ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இரண்டு நடவடிக்கைகளையும் அதன் தலைவர்கள் வரவேற்கப்போவதில்லை.அதேசமயம், ஹமாஸின் இப்போதைய மாற்றம், சமரசத்துக்கு அது தயாராக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

இரண்டாவதாக, இஸ்ரேலை எதிர்கொள்ளும் விஷயத்தில் பாலஸ்தீனத்தின் மற்றொரு இயக்கமும் மேற்குக் கரையில் ஆட்சியில் இருக்கும் கட்சியுமான ஃபடாவுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இடைவெளி குறைந்திருக்கிறது. இரண்டு இயக்கங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் பாலஸ்தீன நாடு உருவாவதற்கான கருத்தாக்கத்தைப் பலவீனமடையச் செய்திருந்தன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸும் ஃபடாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்தன. இப்போது தன் நிலைப்பாட்டை ஹமாஸ் மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான வாய்ப்பு உருவாகுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, வெள்ளை மாளிகையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த அறிக்கையை ஹமாஸ் வெளியிட்டது கவனிக்கத்தக்கது. கடந்த காலங்களில் ஹமாஸின் தீவிரவாதப் போக்கு காரணமாக, பேச்சுவார்த்தைகளில் அந்த அமைப்பு பங்கேற்பதை இஸ்ரேலும் சர்வதேச நாடுகளும் தவிர்த்தே வந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு இந்த விவகாரத்தில் நீடித்த தீர்வை ஏற்படுத்துவதில் ஹமாஸின் பங்கு தவிர்க்க முடியாதது எனும் அளவுக்கு அந்த இயக்கம் பலம் பெற்றிருக்கிறது. வன்முறையைத் தவிர்த்த பாதையை நோக்கி ஹமாஸ் முன்னேறிவரும் நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களும் இதற்கு ஆக்கபூர்வமான எதிர்வினையாற்ற வேண்டியது அவசியம்!

SCROLL FOR NEXT