தலையங்கம்

ஊழலை ஒழிக்க மத்திய அரசு தயங்குவதேன்?

செய்திப்பிரிவு

ஊழலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்றே தொடர்ந்து சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், ஊழலைத் தடுக்கும் அமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதை லோக்பால் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்திருக்கும் தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் (2013), மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்டத்திருத்தங்கள் செய்யப்படாமலே தன்னளவில் முழுமையாக இயங்கத்தக்கது என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் தாமதம் காட்டப்படுவதையும் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

‘தேர்வுக் குழுவை அமைப்பதற்கான சட்டத் திருத்தங்கள் பற்றிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை பரிசீலனையில் உள்ளது’ எனும் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. லோக்பால் அமைப்புக் கான தேர்வுக் குழுவானது பிரதமர், மக்களவையின் சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர் மற்றும் மேற்கண்ட அனை வராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புவாய்ந்த சட்டவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கியது. தேர்வுக் குழுவில் ஓர் உறுப்பினரின் இடம் நிரப்பப்படாமல் இருந்தாலும்கூட, அக்குழுவுக்கு லோக்பால் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தைச் சட்டம் வழங்கு கிறது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக யாரும் அங்கீகரிக்கப்படாதபோது, எதிர்க்கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராகக் கொள்ளும்வகையில் தலைமைத் தகவல் ஆணையர், மத்தியப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சட்டப் பிரிவுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், லோக்பால் விஷயத்தில் மட்டும் இந்த எளிமையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதில் ஏன் இத்தனை தாமதம் என்று புரியவில்லை.

மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. மக்களவையின் 10% இடங்களைப் பெற முடிந்த கட்சிக்கு மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் என்ற அங்கீகாரத்தை அளிக்க முடியும் என்று ஜி.வி.மவ்லேங்கர் மக்களவை சபாநாயகராக இருந்தபோது உத்தரவிட்டதைத் தவிர, இது தொடர்பாக வேறு எந்தச் சட்டமும் இல்லை. அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், எதிர்க்கட்சிகளில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஊதியத்தைப் பற்றிய சட்டம் (1977) வரையறை செய்வது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றித் தொடர்ந்து பேசிவந்த பாஜக, ஆளுங் கட்சியான பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊழல் ஒழிப்பு தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகள் வெற்று வார்த்தைகள் என்றே கருதப்படும்!

SCROLL FOR NEXT