பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹொல்லாந்தே முடிவெடுத்திருப்பதில் வியக்க ஏதும் இல்லை. ஹொல்லாந்தேயின் பதவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் - பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சநிலை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சொந்தக் கட்சிக்குள் சண்டை, தலைவர்களின் தனிப்பட்ட ஊழல் என்று சிக்கல்கள் மேல் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன. மக்களிடையே அவருடைய செல்வாக்கு கடுமையாக வீழ்ந்திருக்கிறது.
"சோஷலிஸ்ட் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஒருவேளை ஹொல்லாந்தே போட்டியிட்டால், அவருக்கு எதிராகப் போட்டியிடுவோம்" என்று கட்சிக்குள்ளேயே குரல்கள் கேட்கின்றன. ஆக, எல்லா வழிகளும் மறைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தே இனி போட்டியில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார் ஹொல்லாந்தே.
எனினும், ஹொல்லாந்தேவின் முடிவு சோஷலிஸ்ட் கட்சிக்கோ, இடதுசாரி முகாமுக்கோ பெரிய அளவில் மாற்றம் தரும் என்று சொல்வதற்கு இல்லை. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில், விவாதப் பொருள் என்ன என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் வலதுசாரிகளும் அதிதீவிர வலதுசாரிகளுமே இருக்கிறார்கள். மக்களுடைய ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்புவது இடதுசாரிகளுக்குப் பெரும் சவால்தான். ஹொல்லாந்தேயின் நிர்வாகமும் இந்த நிலைமைக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். நிகோலஸ் சர்கோஸி தலைமையிலான வலதுசாரி அரசுக்கு எதிராகக் கடும் பிரச்சாரத்தை நடத்திய ஹொல்லாந்தே, மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுத் திட்டங்களை அமல்படுத்துவேன் என்று கொட்டி முழக்கினார்.
ஆனால், பதவிக்கு வந்த பிறகு பொருளாதாரத் தாராளமயக் கொள்கைகளைத்தான் கடைப்பிடித்தார். பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி அளித்தார். தொழிலாளர் சட்டங்களை அவர்களுக்குச் சாதகமாகத் திருத்தாமல் பெருமுதலாளிகளின் தேவைகளுக்கேற்ப மாற்றினார். ஆனால், அவருடைய கொள்கைகள் பிரான்ஸின் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டவில்லை. நாட்டின் பாதுகாப்பும் வலுவிழந்துவிட்டது. கடந்த ஓராண்டில் பிரான்ஸின் நகரங்கள் மீது பயங்கரவாதிகள் நினைத்த நேரத்தில் நினைத்தபடி தாக்குதல்களை நடத்த முடிந்தது. விளைவாக, அவருடைய தோழமைக் கட்சிகளுக்கும் இடதுசாரிகளுக்குமே எதிரானவராகிவிட்டார்.
பிரான்ஸின் அடுத்த ஆட்சிக் காலம் யார் கைகளில் இருக்கும்? குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிராங்குவா ஃபில்லன் மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த மரீன் லீ பென் இருவர் பெயர்களும் அடிபடுகின்றன. ஃபில்லன் சமூகப் பழமைவாதி. அதேசமயம், பொருளாதாரத்தில் கட்டுப்பாடுகளே கூடாது என்பவர். அரசுத் துறை நிறுவனங்களைத் திருத்தியமைக்க வேண்டும், தொழிற்சங்கங்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டும், அரசு ஊழியர்களைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பவர். லீ பென் மேலதிக வலதுசாரிக் குரலில் பேசுபவர். அமெரிக்காவில் ட்ரம்ப் ஒலித்த குரலை பிரான்ஸில் எதிரொலிக்கிறார். நாட்டின் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்கும் போட்டிக்கும் திறந்துவிடாமல் காப்பாற்றும் கொள்கையையே பின்பற்றுவேன் என்று அறிவித்திருக்கிறார். ஒரு புதிய காலத்துக்குள் நுழைய விருக்கிறது பிரான்ஸ் என்பது மட்டும் தெரிகிறது!