தலையங்கம்

ஊழல் ஒழிப்பு முழக்கத்தை உறுதிப்படுத்த லோக்பால் நியமனத்தை இறுதி செய்யுங்கள்!

செய்திப்பிரிவு

ஊழல் ஒழிப்பின் ஒரு பகுதி என்று கள்ளப் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. நல்லது. கூடவே, அமைப்பைச் சுத்தப்படுத்தும் வேலையிலும் இறங்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து விசாரணைக்கு உத்தரவிடும் லோக்பால், உயர் பதவிக்கு உரியவரை நியமிப்பதில் இனியும் தாமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கூடவே, ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி, லோக்பால் நியமனத்தைத் தாமதப்படுத்தும் அரசின் போக்கையும் அது கண்டித்திருக்கிறது.

2013-ல் கொண்டுவரப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு சிறு திருத்தம் இன்னமும் நிறைவேற்றப்படாததால்தான், இந்தத் தாமதம் நிலவுகிறது. லோக்பாலைத் தேர்ந்தெடுப்பதற்கான ஐந்து உறுப்பினர்கள் குழுவில், மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவரை உறுப்பினராகச் சேர்த்துக்கொள்வது பற்றியது அந்தத் திருத்தம். முதலில் கொண்டுவந்த சட்டத்தில் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ என்று இருந்தது. மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10%-க்கு மேல் இருக்கும் கட்சிதான் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக இருக்க முடியும். இப்போதுள்ள மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், அந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே, நாடாளுமன்ற நடைமுறைகளுக்காக இப்போதிருக்கும் எதிர்க்கட்சியில், தனிப்பட்ட முறையில் பெரியது என்ற அளவுகோலில் அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் ஊழல் தடுப்பு - கண்காணிப்பு ஆணையர், மத்தியத் தகவல் ஆணையர் ஆகிய பதவிகளுக்கானவர்களைத் தேர்வுசெய்யவும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, எதிர்க்கட்சி உறுப்பினரைக் குழுவில் இடம்பெறச் செய்ய, புதிய நிலைமைக்கேற்ப சட்டத் திருத்தத்தை அரசு இனியும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் அல்லது அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது அவ்வாறு செய்யுமாறு உச்ச நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லோக்பாலாக நியமிக்கப்பட வேண்டியவரை ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு தேர்ந்தெடுக்கிறது. பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இந்த நான்கு பேரால் பரிந்துரைக்கப்படும் பெயர்களில் இருந்து குடியரசுத் தலைவர் தேர்வுசெய்யும் நீதித் துறையைச் சேர்ந்த ஒரு நிபுணர் ஆகியோரைக் கொண்டதுதான் ஐந்து உறுப்பினர் தேர்வுக் குழு. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே பெயரளவில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டாலும் அவருக்கு அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்படவில்லை. எனினும், அவரை அப்படி அங்கீகரிப்பதில் தடை ஏதும் இல்லை. எனவே, இந்த அங்கீகாரத்தை வழங்கி, லோக்பாலை நியமிப்பதை அரசு விரைவுபடுத்த வேண்டும். உண்மையில் லோக்பால், லோக் ஆயுக்தாக்களை நியமிப்பதற்கு அரசியல் உறுதியும் சிறிதளவு பெருந்தன்மையும் மட்டுமே அரசுக்குத் தேவை!

SCROLL FOR NEXT