தமிழகத்தின் ஆறு முறை முதல்வரும், திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவருமாக இருந்த ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையிலும் அவருடைய ஆதரவாளர்களிடையிலும் எழுந்திருக்கிறது. இது தொடர்பான கையெழுத்து இயக்கமும்கூடத் தொடங்கிவிட்டது. மிக இயல்பான, நியாயமான கோரிக்கை இது.
மறைந்த தலைவர்கள், ஆளுமைகளின் நினைவாக அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களிலும் பொது இடங்களிலும் நினைவிடங்கள் அமைப்பது இயல்பானது. அதேபோல, அவர்கள் வாழ்ந்த இல்லங்கள் நினைவில்லமாக்கப்படுவது இயல்பானது. உலகெங்கும் முக்கியமான ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக ஆக்கும் வழமை இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரியார், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் என்று நவீன அரசியல் வரலாற்றின் முக்கியமான ஆளுமைகள் எல்லோருக்குமே நினைவில்லங்கள் இருக்கின்றன.
அந்த நினைவில்லங்களில் சம்பந்தப்பட்ட ஆளுமைகளின் அரிய புகைப்படங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், வாசித்த புத்தகங்கள், எழுதிய நாட்குறிப்புகள், பத்திரப்படுத்திவைத்த கடிதங்கள் என்று அவர்கள் வாழ்வின் நினைவைச் சொல்லும், அவர்கள் விட்டுச் சென்ற பதிவுகள் ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. பொதுமக்களுக்கும் வரவிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் அவை நிறையச் செய்திகளைச் சொல்கின்றன. கூடவே, சமூகம் கடந்து வந்த பாதையையும் பகிர்கின்றன.
மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே, ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்திருக்கிறது. அதுபோலவே, சென்னை, போயஸ் தோட்டத்தில் அவர் வசித்த 'வேதா நிலையம்' இல்லமும் நினைவில்லமாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. அவருடைய வாழ்வின் மிக முக்கியமான ஒரு அங்கம் 'வேதா நிலையம்'. அதையும் ஜெயலலிதா வாழ்வையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான பல முடிவுகள் எடுக்கப்பட்ட இடமும்கூட அது. பல்வேறு திறமைகள் கொண்ட திரைக் கலைஞராகவும், ஒப்புமை அற்ற அரசியல் ஆளுமையாகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கைச் சுவடுகள், இனிவரும் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை. குறிப்பாக, ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண்ணாக அவர் எட்டிய உயரங்களும் நிகழ்த்திய சாதனைகளும் பெண்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கக்கூடியவை.
ஜெயலலிதாவின் சொத்துகள் அவருடைய மறைவுக்குப் பின் யாரைச் சென்றடையப்போகின்றன எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒரு விஷயத்தை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். “எனக்கென்று குடும்பம், சொந்தங்கள் கிடையாது. மக்களுக்காக நான்; மக்களால் நான்” என்று கடைசிவரை முழங்கிய அவருடைய சொத்துகள் மக்களின் சொத்தாவதே இயல்பானதாக இருக்க முடியும். எப்படியிருந்தாலும், 'வேதா நிலையம்' உடனடியாக அரசுடைமையாக்கப்பட வேண்டும். அதை ஜெயலலிதாவின் நினைவில்லமாக்குவது, அவர் வழிவந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு எடுக்கும் முதல் முடிவாக இருக்க வேண்டும்!