நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்ற விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டையே ஆட்டிப்படைக்கும் பணமதிப்பு நீக்கம், எல்லையில் அடிக்கடி நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் என்று விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் பல இருந்தும், நாடாளுமன்றத் தொடரே வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு மசோதாக்களில் இரண்டு மசோதாக்கள் நிறைவேறின. சர்ச்சைக்குரிய '2016 வரிச்சட்ட மசோதா (இரண்டாவது திருத்தம்)' எந்த வித விவாதமும் இன்றி, அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் நிறைவேறியிருப்பது, ஆளும் தரப்பு தான் நினைத்ததை முடித்துக்கொண்டிருப்பதற்கு ஓர் உதாரணம். வினாப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 330 கேள்விகளில் 2 கேள்விகளுக்கு மட்டுமே வாய்மொழியாகப் பதில் தரப்படும் வகையில் மாநிலங்களவை செயல்பட்டிருக்கிறது.
அவையை நடத்தவிடாமல் ஆளும்கட்சித் தரப்பு நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகள்தான் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டு, அவையின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதாக ஆளும் கட்சி தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. ஜனநாயகத்தின் உச்சபட்ச அடையாளமும், மக்களுடைய பிரச்சினைகளுக்குப் பேசித் தீர்வுகாண வேண்டிய இடமுமான நாடாளுமன்றத்தின் மாண்பை இவ்விதம் போட்டி போட்டு குறைத்துக் கொண்டிருப்ப தற்காக இருதரப்பும் வெட்கப்பட வேண்டும். மக்களுடைய பிரச்சினைகள் குறித்துக் கவலையேதும் இல்லாமல், பொறுப்பில்லாமல் நடப்பதாகத்தான் இதைக் கருத நேரிடும்.
அரசியல் சட்டம் வகுத்தளித்த கடமையை நிறைவேற்ற முடியாமல் நாடாளுமன்றம் சீர்குலைக்கப்பட்டால் மக்கள் அதன் மீது நம்பிக்கையை இழப்பார்கள்; அதன் பிறகு, மக்கள் மீது அரசியல்வாதிகள் குறைசொல்வதில் நியாயம் இருக்க முடியாது. நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் தடுக்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியைக் குறைகூறும் பிரதமர் மோடி, பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளில் அதன் வாயிற்படியைத் தன்னுடைய தலையால் தொட்டு வணங்கியதை நினைவுகூர வேண்டும்.
எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்கக் கோரியபோதும், விவாதித்தபோதும் அவையில் இருந்து பதில் அளிக்கவும் விளக்கம் தரவும் தயாராக இருந்தோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், கடைசி கட்டத்தில் தனக்கு உடல் நலிவு ஏற்பட்டபோதும்கூட விவாதங்களின்போது அவையில் இருந்ததுடன், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க எழுந்து நின்று அவைக்கு மரியாதை தந்தவர் நேரு என்பதை காங்கிரஸ்காரர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
"சுதந்திரமும் அதிகாரமும் நமக்குப் பெரும் பொறுப்பைத் தான் கொடுக்கின்றன; கோடிக்கணக்கான இந்திய மக்களின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் இறையாண்மை மிக்க பிரதிநிதிதான் இந்த அவை" என்று இந்திய அரசியல்சட்டத்தை வகுப்பதற்கான சபையில் உணர்ச்சிமிகு உரையாற்றினார் நேரு. இதை அனைத்துத் தரப்பும் உணர்ந்து அடுத்த தொடரிலிருந்து நாடாளுமன்றக் கூட்டத்தைச் சுமுகமாக நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.