தலையங்கம்

உறவுகளைப் புதுப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு!

செய்திப்பிரிவு

கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் அடிப்படையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 2003-ல் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாடு இன்றைக்கு நடைமுறையில் இல்லை. இரண்டு நாட்டுப் படை வீரர்களுக்கும் இடையில் தினமும் துப்பாக்கிகள் வெடித்துக்கொண்டிருக்கிற சூழலில், அமைதியைப் பற்றி யாரும் யோசிக்கும் நிலையில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. எந்த மட்டத்திலும் தற்போது இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடக்கவில்லை. சர்வதேச எல்லையிலும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிலும் அதிகரிக்கிற உயிர்ச் சேதங்கள் தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களும் அவரவர் நாட்டுத் தூதர்களை அழைத்து அறிக்கை அளிக்கின்றன.

பாகிஸ்தான் இன்னமும் 19 இந்திய வீரர்களைப் பலி கொண்ட உரி தாக்குதலைக் கண்டிக்கவில்லை. பலுசிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை இந்தியாவும் கண்டிக்கவில்லை.

பாகிஸ்தானின் அடுத்த ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் காமர் ஜாவேத் பஜ்வா பொறுப்பேற்றிருக்கிறார். பொறுமையாகச் செல்வதைப் பலவீனம் எனத் தவறாக கருதிவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெறும் ரஹீல் ஷெரிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, கடந்த சில நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது பற்றிய கவலையை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. எனினும், நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் இல்லை.

இருதரப்புப் பேச்சைத் தொடங்குவதே அமைதிக்கான வழி. நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் இருக்கவே செய்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இந்தியா வருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் டிசம்பர் 3, 4 தேதிகளில் நடைபெற உள்ள ‘ஹார்ட் ஆஃப் ஆசியா’ மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார் சர்தாஜ் அஜீஸ். கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். இரு நாடுகளிடையேயான ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று அப்போது அவர் அறிவித்தார். இந்த ஆண்டு அத்தகைய பேச்சுக்கான வாய்ப்பு இதுவரை இல்லை என்றாலும் முயற்சிக்கலாம்.

இந்த மாநாடு பதற்றங்களைத் தணிப்பதற்கான ஒரு வாய்ப்பைத் தரும். ஆஃப்கன், ஈரான், ரஷ்ய, சீன அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு இது. இந்தியாவைப் போலவே ஏனைய அண்டை நாடுகளை இலக்காகக்கொண்டு பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இந்த மாநாடும் வலியுறுத்தும் வாய்ப்பிருக்கிறது. எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் தருணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் இன்றைய பதற்றச் சூழலைக் குறைத்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவேனும் இரு தரப்பும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தப் பதற்றம் யாருக்கும் பயன் தராது. அமைதி மனித உயிர்களுடன் பின்னப்பட்டிருக்கிறது!

SCROLL FOR NEXT