காச நோய் கட்டுப்படுத்தப்படாமல் மேலும் மேலும் லட்சக்கணக்கானவர்களைப் பலி கொண்டு வருவது குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவை கூட்டப்பட வேண்டும் என்று முதல் முறையாக அழைப்பு விடுத்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.). காச நோயால் இறப்பவர்களும் காச நோய்க்கு ஆளானவர்களும் உலக அளவில் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வந்தாலும், சமீபகாலமாகச் சில நாடுகளில் காச நோய்க்கு ஆளாகும் புதியவர்களின் எண்ணிக்கையும், காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் இதற்கு முன்னால் மதிப்பிட்டதைவிட அதிகமாக உள்ளன. இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்திருப்பதுதான். 2014-ல் 22 லட்சம் பேருக்கு காச நோய் ஏற்பட்டது. 2015-ல் அந்த எண்ணிக்கை 28 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுகூட இடைக்கால மதிப்பீடுதான். உண்மையில், காச நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள் 2013 முதல் 2015 வரையில் தங்களிடம் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்த பிறகுதான், காச நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு தெரிய வந்திருக்கிறது. காச நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தால் அரசுக்கு அது பற்றிய தகவலைத் தெரிவிப்பது கட்டாயம் என்று 2012-ல் மத்திய அரசு அறிவித்த பிறகும்கூட, பல தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அதில் அக்கறை காட்டவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளில் 50% பேரும், அரசு மருத்துவமனைகளில் 65% பேரும் தான் முழுமையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். அப்படியெனில், இரு பிரிவுகளிலும் கணிசமானோர் நோயைத் தீர்க்கும் மருந்துகளை உட்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. காச நோய்க்கு நல்ல மருந்துகள் உண்டு, அதை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு முதலில் ஊட்டப்பட வேண்டும். காச நோய் வந்தவர்கள் அதை மறைக்கவோ, அதைக் கண்டு அச்சப்படவோ கூடாது. மருந்தைச் சிறிது காலத்துக்கு மட்டும் உட்கொண்டுவிட்டு, குணமடைந்துவிட்டதாகக் கருதி நிறுத்திவிட்டால், பிறகு தடுப்பு மருந்துகளுக்கு அது கட்டுப்படாது.
திட்டமிட்டபடி முன்னேற்றம் அடையாமல், தேசிய காச நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் பின்தங்கியே இருக்கிறது. காச நோயாளியின் சளியிலிருக்கும் கிருமியின் மூலக்கூறைக் கண்டுபிடித்து, தக்க தடுப்பு மருந்தைப் பரிந்துரைக்கும் முன்னோடித் திட்டம், கிருமியைக் கொல்லும் ஆற்றல் மருந்துக்கு இருக்கிறதா என்று ஆராயும் சோதனை, குழந்தைகளுக்கு உகந்த காச நோய் மருந்தை அறிமுகப்படுத்துவது போன்றவற்றில் திட்டமிட்ட முன்னேற்றம் இல்லை. காச நோயை ஒழிக்கப் பல முனைகளில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியா தன்னுடைய எல்லைக்குள் காச நோயை முற்றாக ஒழிக்காதவரை உலகம் இதில் வெற்றி பெறுவது இயலாது.