கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மக்கள் அடைந்துவரும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அன்றாடச் செலவுக்குக்கூடப் பணமில்லாமல் ஏழைகளும் நடுத்தர மக்களும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன்பு கால்கடுக்கக் காத்திருக்கின்றனர். அரசு அனுமதிக்கும் பண அளவு வீட்டுச் செலவுக்கும் சிறு வியாபாரத்துக்கும் போதவில்லை. அத்துடன், ஒருவரே மீண்டும் மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதைத் தடுப்பதற்காகக் கை விரலில் மை வைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.
500, 1,000 ரூபாய் நோட்டுகளையும் விலக்கிவிட்டு, அதைவிட உயர் மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளைக் கொடுத்தால் அதை எப்படி மக்கள் மாற்றுவார்கள் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. பெரும்பாலான செலவுகளுக்குத் தேவைப்படும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் போதிய அளவில் இல்லையென்றால், குழப்பமும் அலைச்சலும் ஏற்படும் என்று அரசு முன்கூட்டியே கணித்திருக்க வேண்டாமா?
அறிவிப்பு வெளிவந்து ஒரு வாரம் ஆன பிறகும்கூட ஏ.டி.எம்.களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்ப முடியவில்லை. நிரப்பப்படும் 100 ரூபாய் நோட்டுகளும் உடனுக்குடன் தீர்ந்துவிடுகின்றன. இந்த அறிவிப்பை வெளியிடும் முன்னர், 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கோடிக்கணக்கில் அச்சடித்தால் கறுப்புப் பணக்காரர்கள் உஷாராகிவிடுவார்கள் என்று ரகசியம் காத்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முறையான மாற்றுத் திட்டங்கள் இல்லாமல் மக்களைப் பரிதவிக்கவிட்டது அரசின் தவறுதானே?
2,000 ரூபாயுடன் 500 ரூபாயும் சேர்த்து விநியோகித்திருந்தால் மக்களின் சிரமம் குறைந்திருக்கும். அப்படிச் செய்யாததால் 100 ரூபாய் நோட்டு வழங்கியும் எதற்கும் போதவில்லை. பீதியடைந்த மக்களுக்கு அரசும் வங்கிகளும் தெரிவித்த தகவல்களும் தெளிவாகவும் நம்பிக்கை ஊட்டும் வகையிலும் இருந்திருக்கலாம். மக்களுடைய மன அழுத்தங்களைத் தாமதமாகப் புரிந்துகொண்ட பிறகுதான் பணம் எடுப்பதற்கான வரம்பை அதிகரித்தும், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செலுத்துவதற்கான கால வரம்பை நவம்பர் 24 வரை நீட்டித்தும் தபால் அலுவலகங்களுக்கு நிறைய ரொக்கத்தை அனுப்பியும் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்தது.
வங்கித் துறை ஊடுருவாத, தொலைதூர கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ரொக்கத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் வியாபாரமும், மக்களுடைய நுகர்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுப் பொருளாதார வளர்ச்சி வேகத்தையும் கணிசமாகக் குறைக்கும். அரசு விரும்புவது இதைத்தானா?