தலையங்கம்

வாசகர்களின் ஆதரவோடு தொடரும் அறிவுப் பயணம்...

செய்திப்பிரிவு

வாசகர்களின் பேராதரவோடு பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’. புதியனவற்றை, நல்லனவற்றை விரும்பும் வாசகர்களின் வெற்றி இது.

செய்திகளை உற்பத்திசெய்து குவிக்கவோ, பரபரப்புச் செய்திகளின் வழியாக வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்திழுக்கவோ முயலாமல், அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படக்கூடிய அறிவார்ந்த ஒரு நாளிதழாக ‘இந்து தமிழ் திசை’ தனது பயணத்தைத் தொடர்கிறது.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பொதுச் சமூகத்தின் குரலாகவே ‘இந்து தமிழ் திசை’ இயங்கிவருகிறது. அரசியல் கட்சிகளின் சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் கருத்துகளையே எப்போதும் எதிரொலித்துவருகிறது. அரசு நிர்வாகம் குறித்து விதந்து பாராட்டுவது அல்லது குற்றங்கூறுவது என்று எந்தப் பக்கமும் சாயாமல், மக்களின் மேம்பாட்டுக்குரிய நல்ல திட்டங்களை உடனடியாக வரவேற்றுப் பாராட்டுவதும், குறைகள் எனக் கருதும்போது சற்றும் தயங்காமல் அவற்றைக் களைவதற்கான தீர்வுகளை முன்வைப்பதுமே ‘இந்து தமிழ் திசை’யின் நிலைப்பாடாகத் தொடர்கிறது.

தமிழின் சமகால அறிவாளுமைகள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்போடு வெளிவரும் கருத்துப் பேழைப் பக்கங்களும் இணைப்பிதழ்களும், கடந்த பத்தாண்டுகளில் தமிழ் அறிவுலகில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்ப் பண்பாடு குறித்தும் தமிழ் நிலத்தின் அரசியல் குறித்தும் பல்வேறு கோணங்களிலிருந்து பல நூறு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அறிவியல் குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் தனி அக்கறை காட்டப்படுகிறது. கருத்துச் சித்திரங்கள், கடிதங்கள், விவாதங்கள் வழியாக வாசகர்களின் பங்கேற்புக்குத் தனிக்கவனம் காட்டப்படுகிறது. மாணவர்களுக்கு உயர் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழிகாட்டுவதில் ‘இந்து தமிழ் திசை’ எப்போதுமே களத்தில் முன்னிற்கிறது.

எளிய மனிதர்களின் சாதனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதில் தனிக்கவனம் காட்டுகிறது. தமிழுக்கும் தமிழர் நலனுக்கும் பங்காற்றியவர்களைத் ‘தமிழ்த்திரு’ விருதுகளின் வழியாகக் கொண்டாடுகிறது. அதன் வாயிலாக, அவர்களை மற்றவர்களும் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறது.

குற்றச் செய்திகளைக் கையாளும்போது, மீண்டும் அத்தகைய குற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற அக்கறையுடனேயே அச்செய்தி வெளியாகிறது. திரைப்படங்களைப் பற்றிய செய்திகளிலும் கட்டுரைகளிலும் கேளிக்கை அம்சங்களை அறவே நீக்கி, அதை முக்கியமானதொரு கலை வடிவமாகவும் சமூக மாற்றத்துக்கான வலிமையான ஊடகமாகவுமே முன்னிறுத்துகிறது.

‘இந்து தமிழ் திசை’யின் ஒவ்வொரு அங்குலமும் மிகுந்த பொறுப்புணர்வோடும் வாசகர்களின் மனதில் நம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் விதைக்கும் நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. களத்தில் நிற்கும் செய்தியாளர்களில் தொடங்கி, ஆசிரியர் குழு வரைக்கும் அந்தக் கொள்கையில் சமரசமற்ற உறுதியோடு கைகோத்து நிற்கின்றனர்.

தேசத்தின் மீது பற்று கொண்ட, சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் நல்ல குடிமக்களை உருவாக்குவதே ‘இந்து தமிழ் திசை’யின் இலக்கு. ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என்றில்லாமல் தரமான உள்ளடக்கத்துக்குப் பலமாகத் தோள் கொடுத்து ஆதரிக்க நாங்கள் இருக்கிறோம் என்று வரிசைகட்டி நிற்கும் வாசகர்களே ‘இந்து தமிழ் திசை’யின் பெரும்பலம்.

SCROLL FOR NEXT