தலையங்கம்

முத்தலாக் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?

செய்திப்பிரிவு

தனிப்பட்ட மதச் சட்டங்கள், அரசியல் சட்டத்துக்கு இயைந்ததாக இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வெளிப்படையான நிலைப்பாடு ஒரு முக்கியமான நகர்வு. இது தொடர்பில் ஒரு அறுதியான முடிவை உச்ச நீதிமன்றம் எடுக்க இது வழிவகுக்கும்.

விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், மதக் கருத்துகளைப் பரப்பவும் இந்திய அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு அனுமதி அளிக்கிறது. அதேசமயம், சட்டத்தின் முன் அனைவரும் சம உரிமைகளுடன் வாழவும் கண்ணியமாக நடத்தப்படவும் அரசியல் சட்டம் உறுதியளிக்கிறது. இந்நிலையில், மதங்கள் தொடர்பான நடைமுறைகளுக்கு அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பானது, அதே அரசியல் சட்டம் உறுதிசெய்யும் அடிப்படை உரிமைகளுக்குப் பொருந்தாத வகையில் முரணாக இருக்கிறதா என்ற கேள்வி முத்தலாக் விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய அரசால் எழுப்பப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து மூன்று முறை ‘தலாக்’என்று வாய்மொழியாகவே சொல்லி மணமுறிவை ஏற்படுத்துவதும், பல தாரங்களை மணம் செய்துகொள்வதும் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியாமல் முஸ்லிம் பெண்களுக்குப் பெருந்தடையாக இருக்கிறது என்ற வாதம் வலுத்துவருகிறது. உரிய காரணம் இல்லாத மணவிலக்கை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அத்துடன் கணவன் - மனைவிக்குள் கருத்து வேற்றுமைகள் நீங்க சமரச முயற்சிகள் எடுக்கப்பட்டாக வேண்டும் என்றே இஸ்லாம் கருதுகிறது. பெண்களின் நலன்கள், உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அது தடை விதிக்கவில்லை. இந்தப் பின்னணியில் பெண்களின் கோரிக்கையைக் கரிசனத்துடன் அணுகும் ஒரு முடிவை மத அமைப்புகளே எடுத்திருக்கலாம். மாறாக, “மூன்று முறை தொடர்ச்சியாக தலாக் என்று வாய்மொழியாகச் சொல்வதைச் செல்லாது என்று அறிவிக்கக் கூடாது, பலதார மணத்தை அனுமதிக்கும் நடைமுறையைச் செல்லாது என்று ரத்துசெய்யக் கூடாது” என்றெல்லாம் அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் மனுதாக்கல் செய்திருப்பது ஆணாதிக்க உணர்வையும் கட்டுப்பெட்டித்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, அவர்களுக்கு அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இந்நடவடிக்கைகள் மறுப்பதாகவே தோன்றுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. மேலும், மதங்களின் தனிச் சட்டமானது நாட்டின் நீதித் துறையின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டது, அரசியல் சட்டத்துக்கு அது கட்டுப்பட்டது அல்ல என்ற வாதமும் ஏற்கத் தக்கதாக இல்லை.

இதுபோன்ற தனிச் சட்டம் சார்ந்த மத உரிமைகள் நீதித் துறையின் பரிசீலனைக்கு வருவது இது முதல் முறையல்ல. இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுப்பதன் மூலம், காலத்துக்குமான ஒரு வழிகாட்டலை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும். ஒரு மதத்துக்கு அவசியமான நடைமுறைகள் அல்லது மதத்தின் அங்கமாகிவிட்ட பழக்கவழக்கங்கள் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால், எல்லா அம்சங்களையும் அது மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT