தலையங்கம்

சொன்னால் போதாது செயலிலும் காட்டுங்கள்!

செய்திப்பிரிவு

அற்புதமான வார்த்தைகள்: “நாட்டின் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் 200 கோடி மரங்களை நட அரசு திட்டமிட்டிருக்கிறது; வேலையில்லாத இளைஞர்கள் மூலம் இந்த வேலையை அரசு மேற்கொள்ளும். இதற்கான திட்டத்தைத் தீட்டுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவதுடன் சுற்றுச்சூழல் மேம்படவும் இது உதவும்” என்று கூறியிருக்கிறார் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமச் சாலைகள் நெடுகிலும்கூட இதேபோல மரங்களை நடலாம், அதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார். இதற்கு நாடு முழுக்க 30 லட்சம் இளைஞர்களை வேலையில் ஈடுபடுத்தலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கிராமப் பஞ்சாயத்துகள் உதவியுடன் இந்த மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இளைஞருக்கும் 50 மரங்கள் ஒதுக்கப்படும், மரம் வளர்ந்து பலன்தரும்போது அவர்களுடைய வாழ்க்கைச் செலவுக்கான தொகையை அவற்றிலிருந்தே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆழிப்பேரலைத் தாக்குதலின்போது நம்முடைய கடற்கரைகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பற்றவை என்பதை நேரடியாக நாம் பார்த்தோம். கடற்கரையோரம் ஒருகாலத்தில் வளர்ந்த அலையாத்திக் காடுகளை அழித்ததன் பலனை ஆழிப்பேரலைத் தாக்குதலின்போது அனுபவித்தோம்.

உலகம் இப்போது அழிந்த காடுகளைப் பற்றியும் பருவமழை குறைந்ததைப் பற்றியும்தான் அதிகம் பேசுகிறது. மரம் வளர்த்தால் இலை உதிர்ந்து குப்பையாகிறது என்பதற்காக மரத்தை வெட்டும் மூடர்கள் நம்மில் அனேகம். மின்வாரிய ஊழியர்களின் வசவுகளைத் தாங்காமல் வீதிகளில் வெட்டப்பட்ட மரங்கள் ஆயிரக் கணக்கில் இருக்கும். ஒவ்வொரு கிலோ மீட்டர் சாலைத் திட்டமும் நூற்றுக் கணக்கான மரங்களின் சடலத்தின் மீதுதான் செயல்படுத்தப்படுகிறது. எத்தனையோ நதிகள் நீர்வரத்து குறைந்து ஓடையாகவும் சாக்கடைகளாகவும் மாறிவிட்டன. நல்ல தண்ணீருக்குப் பஞ்சம் வந்துவிட்டது.

நிலத்தடி நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து குடிநீருக்குப் பெரிய பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கட்கரி வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கும் திட்டம் செயலாக்கப்பட்டால், எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும்!

இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார் கட்கரி. பருவமழையில் கிட்டத்தட்ட 60% நீர் தேக்கப்படாமலும் பயன்படுத்தப் படாமலும் கடலுக்குச் செல்வதையும் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இப்படிச் செல்லும் நீரில் 15% நீரைச் சேமிக்க முடிந்தாலே நம்முடைய தண்ணீர்ப் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார். கங்கை, யமுனையைத் தூய்மைப்படுத்தி அதில் சரக்குப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் அரசு விரும்புகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தைகளுமே இனிக்கின்றன.

அதேசமயம், கடந்த 6 தசாப்தங்களின் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், இப்படி இனிக்கும் வார்த்தைகள் வழிநெடுக இறைந்து புதைந்து கிடப்பதைத்தான் பார்க்க முடிகிறது. கட்கரி அவர்களே… நீங்கள் வித்தியாசமானவர் என்பதை நிரூபிக்க காலம் ஒரு வாய்ப்பு வழங்குகிறது… சொன்னதை நடத்திக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT