தலையங்கம்

சென்னையிலேயே ‘சிப்பெட்’ நீடிக்க கரங்கள் சேரட்டும்!

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முயற்சிக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு நியாயமானது.

சென்னை - கிண்டி தொழிற்பேட்டையில் 1968-ல், சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனமான இது, நாட்டின் முக்கியமான பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயல்படும் கல்வி நிறுவனம் இது. இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 13,376 மாணவர்கள் இந்நிறுவனத்தில் பயின்றுவருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள 27 நகரங்களில், 2,500 ஊழியர்களுடன் கிளை விரித்திருக்கும் இந்நிறுவனம், தொடக்கத்தில் மத்திய அரசின் முதலீடுகளில் தொடங்கப் பட்டாலும், தற்போது சொந்த நிதி ஆதாரத்தைக்கொண்டே சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மேலதிகமாக, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் ரூ.250 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சிப்பெட்’ நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 1999-ல் முதல் முயற்சி நடந்தது. அடுத்து, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், 2007-ல் அடுத்த முயற்சி நடந்தது. எனினும், தமிழக அரசியல் கட்சிகளின் விழிப்புணர்வுமிக்க எதிர் நடவடிக்கைகளால் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில், தனியார்மயமாக்கல் முயற்சியின் தொடக்க நகர்வாகவே இந்நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றும் முயற்சிகளில் பாஜக அரசு இறங்கியிருக்கிறது என்ற ஊழியர்களின் சந்தேகம் புறந்தள்ளக் கூடியது அல்ல. அதிகாரப்பரவலாக்கல் வலுவாகப் பேசப்படும் இந்நாட்களில், தமிழகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லியில் மாற்றுவதற்கான, நியாயமான காரணங்களையே யூகிக்க முடியவில்லை. அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து, இந்நிறுவனத்தின் தலைமையகம் சென்னையிலேயே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தனியார்மய முயற்சிக்கு எதிராகத் தான் எடுத்த நடவடிக்கையை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலவேறு கட்சித் தலைவர்களும் இதுகுறித்துப் பேசியிருக்கின்றனர். தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும். மேலும், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸின் தமிழகத் தலைவர்களும் இதுகுறித்து அக்கட்சிகளின் தலைமையுடன் பேச வேண்டும். தமிழகக் கட்சிகள் ஒருசேரச் செயலாற்ற வேண்டிய இன்னொரு பிரச்சினை இது!

SCROLL FOR NEXT