மத்திய அரசு நியமித்த நிதிக் கொள்கைக் குழு, தனது முதல் கூட்டத்தில், குறுகிய காலக் கடனுக்கான வட்டியில் (ரெபோ வீதம்) 0.25% குறைத்திருக்கிறது.
இதையடுத்து, தற்போது 6.5% ஆக இருக்கும் வட்டி வீதம் 6.25% ஆகக் குறைகிறது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டியைக் குறைக்க முடியும். இது கட்டுமானத் துறைக்கும் மோட்டார் வாகனத் துறைக்கும் ஊக்குவிப்பாகத் திகழும். ரொக்கக் கையிருப்பு வீதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம், இப்போதுள்ள சூழலில் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடத் தேவையான நடவடிக்கை என்பதால், இந்த வட்டிக் குறைப்பு சந்தைக்கு வியப்பை அளிக்கவில்லை.
இந்தக் கூட்டத்தின்போது, நாட்டின் நிதி நிலவரம், பொருளாதார நிலவரம், சர்வதேசப் பொருளாதாரச் சூழல் போன்றவை குறித்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் படேல் எடுத்துரைத்தார். நிதிக்கொள்கை தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டது. வட்டி வீதத்தைக் கால் சதவீதம் குறைப்பதென்று குழுவின் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறார்கள். உலகப் பொருளாதார வளர்ச்சி முன்பைவிட மோசமாகத்தான் இருக்கும் என்று தோன்றுவதால், உள்நாட்டில் உற்பத்தியை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகள் அவசியம். இதை அனைவரும் உணர்ந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்.
வட்டி வீதத்தைக் குறைத்திருப்பதால் தொழில், வர்த்தக, சேவைத் துறையினர் வங்கிகளில் குறுகிய கால, நடுத்தரக் கால கடன்களைப் பெற்று உற்பத்தி, விற்பனை, விநியோகத்தை முடுக்கிவிட வழியேற்பட்டிருக்கிறது. சில்லறைப் பணவீக்க வீதம் 4%-க்கு மிகாமல் கட்டுப்படுத்துவதும் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த இலக்குக்குக் கூடுதலாக 2% அல்லது குறைவாக 2% இருந்தாலும் பாதிப்பில்லை.
பொதுவாக, இப்படியொரு குழுவை நியமித்தால் அதில் கருத்தொருமித்த முடிவு ஏற்படுவது அத்தனை எளிதல்ல. ஆனால், நியமிக்கப்பட்ட சிறிது காலத்துக்குள்ளாகவே இக்குழு கூடி கருத்தொற்றுமை அடிப்படையிலும் தொழில்துறை ஏற்கும் விதத்திலும் வட்டியைக் குறைக்க முடிவுசெய்திருக்கிறது. வரவேற்கத் தக்க விஷயம் இது.
பருவமழை நன்கு பெய்திருப்பதால் உணவு தானிய விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு கொடுப்பதால், உணவுப் பொருட்களின் விலை சற்றே அதிகரித்து பணவீக்க வீதமும் உயரும் என்பது நிச்சயம். அதுமட்டுமல்லாது, ஏழாவது நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வீட்டு வாடகைப்படி கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு சில அம்சங்களும் எல்லாத் துறைகளிலும் இடுபொருட்கள் செலவு, ஊதியம் உள்ளிட்டவற்றை உயர்த்துவது நிச்சயம். எனவே, பணவீக்க வீதம் நிச்சயம் உயரும். இவற்றையெல்லாம் தாண்டி உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணிகளால் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதுடன், வளர்ச்சியை அதிகரிப்பது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றைச் செய்ய வேண்டும். நிதிக் கொள்கைக் குழு அவற்றைச் சாதிக்குமா என்று பார்ப்போம்!