பிரதமர் மோடியின் ஈரான் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவியிருக்கிறது. அத்துடன் பாதுகாப்பு நோக்கில் மேற்காசியப் பகுதியில் இந்திய நலனுக்கு வெகுவாக உதவியிருக்கிறது. அணுசக்தி பயன்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளின் தடை நடவடிக்கைகளிலிருந்து கடந்த வருடம்தான் மீண்டது ஈரான். அதனுடனான உலக நாடுகளின் உறவுகள் சீராகத் தொடங்கும் நேரம் இது. இந்த நேரத்திலேயே இந்தியாவும் இந்த முயற்சியை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஈரானின் தெற்குக் கடலோரத்தில் உள்ள சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதும் பயன்படுத்துவதும் பற்றியது.
சுமார் 3,250 கோடி ரூபாய் செலவில் சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தும். இதன் மூலம் இந்திய சரக்குகளை ஆப்கானிஸ்தானுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். நிலப்பரப்பால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் வழியாகப் பொருள்களைக் கொண்டு செல்வது பிரச்சினையாக இருக்கிறது. அதனால் இந்தியத் துறைமுகங்களிலிருந்து ஈரானுக்கு சரக்குகளைக் கப்பல் வழியாக எடுத்துச் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானத்துக்குக் கொண்டு செல்வது எளிது. செலவு குறைவானது. சரக்குகளைக் கொண்டு செல்லத் தேவைப்படும் நாள்களும் வெகுவாகக் குறைந்துவிடும். பாகிஸ்தானைப் பொருத்தவரை இந்தியா, ஆப்கானிஸ்தான் இரண்டுடனும் வலுவான நட்புறவு கிடையாது. ஆப்கானிஸ்தானுடன் இந்தியா உறவாடுவதையும் ஆப்கானியர்கள் இந்தியப் பொருள்களை அதிகம் பயன்படுத்துவதையும் பாகிஸ்தானால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.எனவே, பாகிஸ்தான் வழியாகச் சரக்குகளை அனுப்ப பல்வேறு கட்டுப்பாடுகளைஅது விதித்துவருகிறது. பாகிஸ்தானில் உள்ள கவாதர் துறைமுகத்தை சீனா சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தி வருகிறது. கவாதரிலிருந்து வெறும் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் சபஹார் இருக்கிறது.
கவாதர் சீனா மேம்படுத்திவரும் துறைமுகம் மட்டும் அல்ல. சீன-பாகிஸ்தான் பொருளாதார நிலப்பரப்பும் ஆகும். சீன நாட்டின் பழைய பட்டு வணிகப் பாதையில் வரும் இடமாக அதை அடையாளம் கண்டு சீனா மேம்படுத்துகிறது. மிகப்பெரிய அளவில்அடித்தளக்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளைச் சீனா செய்துகொண்டிருக்கிறது.வர்த்தகமானாலும் ராணுவமானாலும் அதன் தோழமை பாகிஸ்தானுடன்தான் அதிகம். வர்த்தகம், ராணுவம் என்றில்லாமல் அரசியலிலும் பாகிஸ்தானுக்குச் சார்பாகவே நடப்பதுதான் சீனத்தின் வழக்கம். எனவே, அதன் பொருளாதாரப்பாதையில் இந்தியாவை அனுமதிக்காது. எனவே, இந்தியாதன்னுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும் மத்திய ஆசிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவும் ஈரானின் உறவு அவசியப்படுகிறது.
சபஹார் துறைமுகம் மூலம் ஈரான்-துருக்மேனிஸ்தான் கஜகஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா வாணிபத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
சபஹார் துறைமுக மேம்பாடுத் திட்டம் தீட்டி பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டபொருளாதாரத் தடை காரணமாக இது நீண்ட காலமாக நிறைவேறாமலேயே தேக்கமடைந்துவிட்டது. இனி இதை விரைந்து முடிக்க இந்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து ஈரான் மீண்டு வருகிறது. இதற்கு உதவும் வகையில் செயல்பட்டு இந்தியாவும் பயனடைய இதுவே உகந்த சமயம். இந்தியப் பொருள்களை ஈரானுக்கு விற்று சந்தைப்படுத்த வேண்டும். இப் பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் நல்லஉறவைப் பராமரிக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டாகச் செயல்படவும் ஈரானும் இந்தியாவும் ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே இருநாடுகளுக்கும் இடையில் நிலவும்உறவை மேலும் உறுதி செய்ய இரு நாடுகளும் முனைய வேண்டும்.