தலையங்கம்

நேபாள அரசியல் நெருக்கடி

செய்திப்பிரிவு

நேபாளத்தில் மீண்டும் மாற்றம் வரும்போல தெரிகிறது. பிரதமர் பதவியில் இருக்கும் கே.பி. சர்மா ஓளியைப் பதவியிலிருந்து அகற்ற மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டா முயல்கிறார்.

இப்போதைக்குத் தாற்காலிகமாக இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதைப்போலத் தோன்றினாலும் விரைவிலேயே இது மீண்டும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தில் 601 உறுப்பினர்கள். அதில் எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. அதனால் அரசியல் நிலையற்ற தன்மை தொடர்கிறது. ஓளியின் நேபாளக் கம்யூனிஸ்ட் (யு.எம்.எல்.) கட்சிக்கும் நேபாளி காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபாடு வெறும் 21 தான். மாவோயிஸ்ட் கட்சிக்கு 80 உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களால் எந்தக் கூட்டணியையும் பதவியில் அமர்த்த முடியும். எந்தக் கூட்டணியையும் பதவியிலிருந்து இறக்க முடியும்.

மூன்று முக்கியமான உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் ஓளியின் பதவி ஆட்டம் காணுகிறது. நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்கும் அரசியல் சாசனத்தை உருவாக்கி அளிப்பேன் என்றார் அவர். ஆனால், மாதேசிகள், ஜனஜாதிகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களின் அரசியல் சாசனம் தொடர்பான தங்களின் கவலைகளை அவரால் பரிகாரம் காண முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து இந்தியாவும் நேபாளத்தின் புதிய அரசியல் சாசனத்தை விமர்சித்தது.

அடுத்ததாக, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே கசப்புணர்வைப் போக்கிச் சுமுக நிலையை ஏற்படுத்தவும் அவர் தவறிவிட்டார். இந்தியாவிலிருந்து பெட்ரோல்-டீசல், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிய லாரிகள் நேபாளத்துக்குள் செல்ல முடியாமல் 3 மாதங்களுக்கும் மேல் மாதேசிகள் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களால் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்களோடு மிகவும் காலம் தாழ்த்தியே ஓளி பேச்சு நடத்தினார். அதற்குள் நேபாள மக்களிடையே இந்தியாதான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்ற கருத்து பரவி விட்டது.

கடுமையான நிலநடுக்கம் நேபாளத்தில் 9,000-க்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியது. ஏராளமான வீடுகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களும் சேதமாகின. மக்களுக்குக்கான மறுவாழ்வில் அக்கறை செலுத்தாமல் அரசியல் நிகழ்வுகளுக்கு மட்டுமே முக்கியம் தந்தார் ஓளி. இடிந்த 7,70,000 வீடுகளில் ஒரு சதவீதம் கூட மறுபடியும் இன்னும் கட்டப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் இப்போதும் திறந்த வெளிகளிலும் அரைகுறையாக இடிந்த கட்டடங்களுக்குள்ளும்தான் வசிக்கின்றனர். இது நீடித்தால் அடுத்து வரும் பனிக்காலத்தில் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படவும் உயிரிழக்கவும் வாய்ப்பு அதிகம். சர்வதேசச் சமூகம் வழங்கிய கோடிக்கணக்கான ரூபாய் உதவியைக் கையில் வைத்திருக்கிறது ஓளி அரசு. ஆனால், மறுவாழ்வு நடவடிக்கைகளில் போதிய அக்கறை காட்டாமலிருப்பது புதிராகவே இருக்கிறது. மக்களின் இந்த அதிருப்தியை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பயன்படுத்துகிறார்.

சீனத்துடன் நெருங்க நினைக்கும் பிரதமர் ஓளியின் போக்கு தங்களுக்கு அசவுகரியமாக இருக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறையும் பிரதமர் அலுவலகமும் நேபாள வெளியுறவுத்துறைக்கு வெளிப்படையாகவே தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக நேபாளத்தில் நடைபெறும் எல்லா அரசியல் மாற்றங்களுக்குப் பின்னும் இந்தியா இருப்பதாக நேபாள மக்களிடம் அலசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அண்டை நாடான நேபாளத்தின் விவகாரங்களில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு நிதானத்துடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளவேண்டும்.

SCROLL FOR NEXT