வருமான வரித் துறை தனக்குள் மட்டுமே புழங்கும் தரவுகளைப் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது. 2001-10 முதல் 2014-15 வரையான விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் நேர்முக வரிவருவாய் சுருங்குவதையும் மறைமுக வரிவருவாய் அதிகரிப்பதையும் அவை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
2012-13-வது நிதியாண்டில் 2.9 கோடிப் பேர் தங்களுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, இந்தியாவில் 76 கோடிப் பேர் வயதுவந்தவர்கள் என்கிறது. அந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை வெறும் 4%-க்கும் குறைவே! கணக்கு காட்டியவர்களிலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வருமான வரி எதையும் செலுத்தவில்லை.
18,358 பேர் மட்டுமே 2012-13-ல் தங்களுடைய ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் என்று அறிவித்துள்ளனர். ஆடம்பர சொகுசுக் கார்கள், நவநாகரிக வீடுகள், விலைமதிப்புள்ள நுகர்பொருட்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டின ஆபரணங்கள் ஆகியவற்றின் விற்பனையைப் பார்க்கும்போது, அவற்றை வாங்குவோரில் பெரும்பாலானோர் வரி செலுத்துவதில்லை அல்லது மிகக் குறைவாகவே செலுத்தித் தப்பிக்கிறார்கள் என்று புரிகிறது.
கோடிக்கணக்கானவர்கள் உரிய வருமான வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பது அல்லது விலக்குகளைக் காட்டிச் சலுகைகளைப் பெறும் போக்கு அதிகமாக இருப்பதையே இது உறுதிப்படுத்துகிறது.
நாட்டின் வரி வருவாயில் பெரும் பகுதி மறைமுக வரிகள் மூலமே கிடைக்கிறது. பணக்காரர்களைவிட ஏழைகள் - அவர்களுடைய வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது - அதிக வரிச்சுமைக்கு ஆளாகிறார்கள். நாட்டின் நேர்முக வரி வருவாய்க்கான அடித்தளம் மிகவும் குறுகியதாக இருக்கிறது.
இந்தியாவில் வரிவருவாயாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் சுமார் 30 ரூபாய் நேர்முக வரியாகவும் மற்றவை மறைமுக வரியாகவும் வருகிறது. இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஒட்டுமொத்த வரிவருவாய் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் நேர்முக வரியின் பங்கு சுமார் 6 சதவீதமாகவே தேங்கி நிற்கிறது. மாறாக, மறைமுக வரியின் பங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நேர்முக வரிவிதிப்பில் இந்தியா பின்தங்கியுள்ளது. பொதுவாக, கடந்த 10 ஆண்டில் இதில் முன்னேற்றம் காணப்பட்டாலும் கடந்த இரண்டு மத்தியப் பட்ஜெட்டுகளில் மீண்டும் மறைமுகவரிகளை நோக்கியே அரசின் கவனம் சென்றுள்ளது.
மறைமுக வரிகள் மூலம் வருவாய் அதிகம் கிடைப்பது, இரண்டு வகைகளில் நல்லதல்ல. முதலாவது, மறைமுக வரிகளை அதிகம் உயர்த்திக்கொண்டே இருக்க முடியாது. இரண்டாவது, ஏழை - பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் இருவரிடத்திலும் இது ஒரே அளவுக்கு வசூலிக்கப்படுவது. இதனால், பணக்காரர்களைவிட ஏழைகள்தான் அதிக வரிச்சுமையைச் சுமக்க வேண்டியவர்களாகிறார்கள்.
பொருளாதார அறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு இந்த விவரங்கள் பல உண்மைகளை வெளிப்படுத்தும். அரசின் வரிக்கொள்கையை எப்படித் திருத்த வேண்டும், அரசுக்கு வருவாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் ஆராய முடியும். அதன்மூலம் அரசின் வரிக்கொள்கைகள் பற்றிய விமர்சனத்தை மக்கள் மத்தியில் அவர்களால் உருவாக்க முடியும்.
நவீன ஜனநாயகத்தில் வரிவிதிப்பு முக்கியமான அம்சம். வரி ஏய்ப்புதான் உண்மையான தேச விரோதச் செயல். அதைத் தடுக்கும் உறுதியோடு அரசு செயல்பட வேண்டும்.