தலையங்கம்

ஆப்பிரிக்க சகோதரர்களை பாதுகாப்போம்!

செய்திப்பிரிவு

இந்தியாவில் வசித்துவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் காங்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர், உள்ளூர் இளைஞர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள், தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஆப்பிரிக்க தின’க் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று, ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்தியாவில் கல்வி பயில மாணவர்களை அனுப்ப வேண்டாம் என்று ஆப்பிரிக்க நாடுகளைக் கேட்டுக்கொள்ள அவர்கள் முடிவுசெய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அவர்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டதையடுத்து, ஆப்பிரிக்க தினக் கொண்டாட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் ஆப்பிரிக்க மக்களின் நிலை பற்றி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆப்பிரிக்க நாடுகளின் தூதரகங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்களுடன் இந்தியப் பிரதிநிதிகள் கலந்து பேசுவது என்றும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், தெற்கு டெல்லியில் வியாழக்கிழமை இரவு, நைஜீரியா, கேமரூன், உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏழுக்கும் மேற்பட்ட நபர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களைக் காப்பாற்ற யாருமே வராததுதான் அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. ஆனால், இது இனவெறித் தாக்குதல் அல்ல, தொந்தரவு தரும் வகையில் நடந்துகொண்டதால் ஏற்பட்ட சிறு சண்டை என்று உள்ளூர் காவலர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் அலட்சியமாக நடந்துகொள்வது தவறான போக்கு.

2012-ல் பஞ்சாபில் கல்வி பயில வந்த புருண்டி மாணவர், உள்ளூர் இளைஞர்களால் தாக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்று இறந்தது, 2014-ல் டெல்லி முன்னாள் அமைச்சர் ஆப்பிரிக்கப் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் என்று பல்வேறு சம்பவங்களில், ஆப்பிரிக்க மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடந்த சாலை விபத்தைத் தொடர்ந்து தான்சானியாவைச் சேர்ந்த இளம்பெண் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகளின் தூதரக அதிகாரிகள் வரை இதுபோன்ற இனவெறித் தாக்குதல்களை, வெறுப்பூட்டும் பேச்சுகளை, உருவம் அடிப்படையிலான கிண்டல்களை எதிர்கொள்ள நேர்கிறது என்ற தகவல் நிம்மதியிழக்கச் செய்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளும், இந்தியாவும் பரஸ்பரம் அடுத்தவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் மோடி கலந்துகொண்டார். ஆப்பிரிக்க நாடுகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள், தூதர்களைத்தான் இந்தியாவுக்கு அனுப்புகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மொராக்கோ, துனீசியா நாடுகளுக்கு இந்த வாரம் செல்கிறார். பிரதமர் மோடி இன்னும் சில மாதங்களில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லவிருக்கிறார். பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் உலக அரங்கில் முக்கிய இடம்பெறும் நோக்கில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான உறவை, இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. ஆப்பிரிக்க மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும், நிறம் அடிப்படையிலான வேற்றுமை எண்ணங்களிலிருந்து உள்ளூர் மக்களை வெளியே அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளிலும், இனவெறிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் அரசும் உள்ளூர் நிர்வாகங்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT