தலையங்கம்

ரகுராம் ராஜனின் தொலைநோக்குப் பார்வை

செய்திப்பிரிவு

தொழில் தொடங்குவதற்கான சூழல் மேம்படவும், புதிய தொழில் முனைவோருக்கு உற்சாகம் ஏற்படவும் ‘இன்ஸ்பெக்டர் ராஜ்’ நடைமுறை மாற வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியிருக்கிறார். தொழில் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் வாங்க வேண்டும், தயாரிப்பு அளவை அரசிடம் கேட்டுப் பின்பற்ற வேண்டும் என்பன போன்ற நடைமுறைகள் அனைத்தும் தொழில்துறை தாராளமயமாக்கல் கொள்கைக்கு அடுத்து கைவிடப்பட்டன. அதைப் போல ஆய்வாளர்களை அனுப்பி தொழிற்சாலைக்குள் சோதனை நடத்தும் நடைமுறையையும் கைவிட வேண்டும் என்பது அவரது கருத்து.

தொழில் நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டு நடைமுறைகள் பிரிட்டனில் மிகவும் எளிதாக இருக்கின்றன. எனவே, புதிய தொழில்நுட்பம் அல்லது வழிமுறைகளின் மூலம் புதியவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவது பிரிட்டனில் அதிகம். வழிகாட்டு நடைமுறைகள் கடினமாக உள்ள இத்தாலியிலோ உற்பத்தித் துறையில் புதியவர்களின் பங்களிப்பு குறைவு என்பதை ராஜன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் 4 கோடியே 80 லட்சம் நடுத்தர, சிறு தொழில் பிரிவுகள் இருக்கின்றன. மொத்தத் தொழிலாளர்களில் 40% பேர் இப்பிரிவுகளில்தான் வேலை செய்கின்றனர். மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிரிவுகளின் பங்களிப்பு 45%. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்களிப்பு 17%. இவற்றில் பெரும்பாலானவை சொந்த ஆதாரங்கள் மூலம்தான் நிதியைத் திரட்டிக் கொள்கின்றன. சந்தைப்படுத்துவதையும் தங்களுடைய முயற்சியில்தான் செய்கின்றன. எனவே இதன் உற்பத்தி, உற்பத்தித்திறன் இரண்டும் அதிகரிக்க அரசின் ஆதரவு மிகமிக அவசியம். இந்நிலையில், வெளிநாடுகளின் முன்னுதாரணங்களைப் பின்பற்றி நாமும் நமது தொழில்துறை சூழலை மாற்ற வேண்டும் என்று ராஜன் கூறுவது ஏற்கத் தக்கதுதான்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளின் பங்களிப்பு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. நடுத்தர, சிறு தொழில் பிரிவுகள்தான் வேலைவாய்ப்பை வழங்குவதிலும் உற்பத்தியைத் தொய்வின்றி மேற்கொள்வதிலும் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கான கடன் உதவிக்கு இப்போதுதான் தனி வங்கிகள் (முத்ரா) தொடங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், இவற்றைக் கைதூக்கி விட வேண்டும் என்றும் ராஜன் வலியுறுத்துகிறார்.

சிறு தொழில்களும் நடுத்தரத் தொழில்களும் விவசாயம், பெரு நிறுவனங்கள், சேவைத் துறை என்ற மூன்றுக்குமே மூலாதாரமாகத் திகழ்கின்றன. இவற்றுக்குக் கடன் உதவி, மின்சாரம் போன்றவற்றை அளிப்பதுடன் இவற்றுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களை அளிக்கவும் உற்பத்தியானவற்றை எளிதில் சந்தைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகளின் உதவி அவசியம்.

இப்போது நடுத்தரத் தொழில் பிரிவுகளும் முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால் அரசுடைமை வங்கிகள் கடன் தரத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிறுவனங்களை எளிதாகத் தொடங்கவும், தொழில் முனைவோர்கள் விரும்பினால் எளிதாக மூடவும் உரிய விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இவற்றின் மீது வரிச்சுமை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள ராஜன், உரிய அரவணைப்போடு இந்த நிறுவனங்கள் தொழில் முயற்சிகளில் துணிச்சலாக ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித் திருக்கிறார். தொலைநோக்குப் பார்வையுடன் அவர் கூறியிருக்கும் கருத்துகளைப் பின்பற்றினால், தொழில் வளர்ச்சியும், பொருளாதாரமும் மேம்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும்!

SCROLL FOR NEXT