தலையங்கம்

ஆன்லைன் வணிகத்தில் அரசு தலையிடலாமா?

செய்திப்பிரிவு

ஆன்லைன் வர்த்தகம் எனும் மின்வணிகம் நாளுக்கு நாள் வளர்கிறது. இருக்கும் இடத்திலிருந்தே தேவையான பொருட்களை வரவழைத்துக்கொள்கிறோம். இத்தகைய விற் பனையை அங்கீகரிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேநேரம், கடைகளை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்யும் வணிக நிறுவனங் களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின்வணிக விற்பனைக்கு உச்ச வரம்பும் இதர நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவை.

அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் குறையக் கூடாது, தரமான பொருட்கள் - நியாயமான விலையில் நுகர்வோருக்குக் கிடைக்க வேண்டும், கடைவீதியில் விற்பனை செய்யும் நிறுவனங்களை மின்வணிகம் பாதித்துவிடக் கூடாது என்ற அரசின் நோக்கங்கள் சரியானவை.

இந்தியாவில் இப்போது மின்வணிகத்தின் விற்றுமுதல் மதிப்பு ரூ.65,000 கோடிக்கு மேல். ஆயிரக்கணக்கானவர்கள் இதை நம்பியிருக்கின்றனர். ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வணிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் துறையில் அரசு தெளிவான கொள்கைகளை வகுக்க நினைப்பது வரவேற்கக்தக்கது. கடைவீதியில் நடக்கும் வணிகத்துக்கும் சரக்கு குடோன்களிலிருந்து நுகர்வோரைத் தேடிச் செல்லும் வணிகத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசு உணர்ந்துள்ளது. மின்வணிகம் தொடர்பாக சமீபகாலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகளைக் கருத்தில் கொண்டே அரசு இந்த வரம்புகளையும் நியதிகளையும் நிர்ணயித்திருக்கிறது.

இந்தத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100% வரை செய்யலாம் என அனுமதித்துள்ளது. ஒரு பொருளை விற்பனை செய்யும் மின்வணிக நிறுவனம், அதன் மொத்த விற்பனை மதிப்பில் அதிகபட்சம் 25%-ஐ மட்டுமே தன்னுடைய பிராண்டுப் பொருட்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மேலை நாடுகளின் பெரிய நிறுவனங்கள் மின்வணிகம் வாயிலாகத் தங்கள் நிறுவனத்தின் பொருட்களை மட்டுமே இந்தியாவில் விற்பதற்கு அனுமதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிபந்தனையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். வியாபார நிறுவனத்தின் உரிமையில் அரசு இப்படித் தலையிடக் கூடாது. பண்ட உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் தங்களுடைய விற்பனையை அதிகப்படுத்த சில புதிய வழிமுறைகளைக் கையாளு வார்கள். அதில் தள்ளுபடி விலை என்ற உத்தி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தள்ளுபடியில் விற்பவர்கள் தங்களுடைய லாபத்தை மட்டும் குறைத்துக்கொள்வதில்லை. விற்பனையாகாமல் பொருள் தேங்குவதால் ஏற்படும் செலவையும் குறைத்துக்கொள்கிறார்கள். இதை அரசு உணர வேண்டும். தள்ளுபடி தந்து விற்பது வியாபாரி களின் உரிமை. அதனால் லாபம் அடைவது நுகர்வோர்கள். விலையை நிர்ணயிக்கும் வேலையை அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. மின்வணிகத்தின் முக்கிய ஈர்ப்பே பொருளின் விலை குறைத்து விற்கப்படுகிறது என்பதும் வீடு தேடி வருகிறது என்பதும்தான்.

மின்வணிகம், சந்தையை மையமாகக் கொண்ட கடை வணிகம் என்ற இரண்டையும் நெறிப்படுத்துவதும் அங்கீகரிப்பதும் அரசின் கடமை. நுகர்வோரின் நலனும் இதில் முக்கியம். வியாபாரத் தலத்தில் மட்டுமல்லாமல், வியாபார முறைகளிலும் நியாயமுள்ள - சமவாய்ப்புள்ள போட்டிகளுக்கு அரசு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு தரப்புக்குச் சார்பாகவும் இன்னொரு தரப்பை ஒடுக்கும் விதமாகவும் இருக்கும் செயல்களில் அரசே ஈடுபடக் கூடாது.

SCROLL FOR NEXT