தலையங்கம்

திடக்கழிவு மேலாண்மையும் திடமான முடிவும்!

செய்திப்பிரிவு

திடக்கழிவு மேலாண்மையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. திடக்கழிவுக் குப்பைகள் மேலாண்மை மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளுக்கான செலவை, திடக்கழிவை உற்பத்தி செய்பவர்கள் செலுத்த வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட ‘திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் 2016’-ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குப்பைகளை அகற்றும் பொறுப்பும் நகரங்கள் மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த பயனாளர்களுக்கு உண்டு என்கிறது இந்தச் சட்டம். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். இதுபோன்ற விதிமுறை இல்லாததால், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட திடக்கழிவு மேலாண்மைச் சட்டம் பெரிய அளவில் தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது.

திடக்கழிவு மேலாண்மை விஷயத்தில், அவற்றை உருவாக்குபவர்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை ஏற்கெனவே இருக்கிறது. பயனாளர்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளூர் நிர்வாகங்களுக்கு இந்தப் புதிய சட்டம் தருகிறது. அதிக அளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் உணவகங்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவை இந்தக் கட்டணத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் குப்பைகளைப் பிரிக்கும் பணியிலும் அவை ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் 6.2 கோடி டன்னுக்கு மேல் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் மொத்தம் 4.3 கோடி டன் குப்பைகள்தான் சேகரிக்கப்படுகின்றன. அதிலும் 1.2 கோடி டன் குப்பைகள்தான் சரியான முறையில் கையாளப்படுகின்றன. இந்தியாவில் 2030-ம் ஆண்டுவாக்கில், ஆண்டொன்றுக்கு 16.5 கோடி டன் குப்பைகள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. திடக்கழிவு மேலாண்மை எத்தனை முக்கியமான பிரச்சினை என்பதை இந்தத் தகவல் சொல்கிறது.

பெரிய அளவில் குப்பைகளை உற்பத்தி செய்யும் உணவகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிடம் கட்டணம் மற்றும் அபராதத்தை வசூலிப்பதில் நகர்ப் பகுதி நிர்வாகங்கள் காட்டும் முனைப்பைப் பொறுத்தே இதில் வெற்றி காண முடியும். உதாரணத்துக்கு, குப்பைகளை உரமாக்குவது போன்ற பணிகளில் உணவகங்களை ஈடுபடச் செய்வது, குப்பைகளைப் பிரிப்பதில் பெரிய அளவிலான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஈடுபடச் செய்வது ஆகியவற்றைக் கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்காக வசூலிக்கப்படும் கூடுதல் தீர்வை நிதிகளை, குப்பைகளை உரமாக்குதல், மறுசுழற்சி செய்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

தற்போது இருக்கும் சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசுகளும் சரியான முறையில் அமல்படுத்தவில்லை என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், புதிய சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டியது அவசியம். திடக்கழிவு மேலாண்மையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தற்போது இருக்கும் பாணியிலேயே செயல்படுவதை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் குழு அனுமதிக்கக் கூடாது.

அதேபோல், குப்பை பொறுக்கும் தொழிலாளர்களைக் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் கொண்டுவரவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும். குப்பைகளை உரமாக்குவது உள்ளிட்ட பணிகளை முறையாகக் கையாண்டால், நகரங்கள் மற்றும் சிறுநகரங்களைத் தூய்மையாக வைப்பதுடன், மரங்கள், பூங்காக்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றையும் நல்ல முறையில் பராமரிக்கவும் முடியும். குப்பைகள் ஆண்டுக்கணக்கில் கொட்டிவைக்கப்படுவதால் பல வளங்களை இழக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட வேண்டிய தருணம் இது!

SCROLL FOR NEXT