தலையங்கம்

பீலிபீத் படுகொலையும் தாமதமான நீதியும்!

செய்திப்பிரிவு

ஒரு சில வேளைகளில் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் வழங்கப்பட்டால்கூட அது தர்மம், நியாயம் என்றைக்குமே அழிந்துவிடாது என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்த உதவும். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பீலிபீத் மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலை தொடர்பாக விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இதை உணர்த்துகிறது. உத்தரப் பிரதேச மாநில காவல் துறையைச் சேர்ந்த 47 காவலர்களுக்கு அவர்கள் செய்த மனிதாபிமானமற்ற, சட்டவிரோதப் படுகொலைகளுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் பீலிபீத் மாவட்டம் நேபாள எல்லையை ஒட்டிய தெராய் சமவெளிப் பகுதியில் இருக்கிறது. இங்கு சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். 1991 ஜூலை 12-ல் சீக்கிய யாத்ரீகர்கள் சிலர் வழிபாட்டுத் தலங்களுக்குச் சுற்றுலா செல்ல ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களுடைய வாகனத்தை வழிமறித்த உத்தரப் பிரதேச மாநிலக் காவல் துறையினர், அதிலிருந்த 13 இளைஞர்களைத் தனியாக இறக்கி, தங்களுடைய வாகனங்களில் ஏற்றிக்கொண்டு இருளில் மறைந்தனர். அந்த இளைஞர்களை 3 குழுக்களாகப் பிரித்து காட்டில் தனித்தனியே அழைத்துச் சென்று நள்ளிரவில் துடிக்கத் துடிக்கத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொன்றனர். அவர்கள் சீக்கிய பயங்கரவாதிகள் என்றும் பயங்கர ஆயுதங்களைத் தங்களுடன் எடுத்துச் சென்றனர் என்றும் துப்பாக்கிச் சண்டையில் அவர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் கதைகட்டினர்.

அந்தப் பேருந்தில் சென்ற மற்றவர்களின் சாட்சியங்களைக் கொண்டு விசாரணை மிக மந்தமாகவே நடந்தது. இறுதியில், உச்ச நீதிமன்றத் தலையீட்டின் பேரில் இந்தப் புலன் விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 57 காவல் துறையினர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே 10 பேர் இறந்துவிட்டனர்.

உத்தரப் பிரதேச முதல்வராக கல்யாண் சிங் இருந்தபோது நியமிக்கப்பட்ட நீதி விசாரணைக் குழு, காவல் துறையினர் தவறு ஏதும் செய்யவில்லை என்று கூறியதுடன் பயங்கரவாதிகளை இடைமறித்து சுட்டுக்கொன்ற அவர்கள் ‘பாராட்டுக்குரியவர்கள்’என்றும் தட்டிக்கொடுத்தது. சி.பி.ஐ. விசாரணைதான் உண்மையை அம்பலப்படுத்தியது. மேலதிகாரிகள் பலருடைய ஒப்புதலுடனேயே இந்தப் படுகொலை நடந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும், மூத்த அதிகாரிகள் குற்றப்பட்டியலில்கூட இடம் பெறவில்லை. இதற்கு மூளையாகவோ உடந்தையாகவோ இருந்து செயல்பட்டிருக்கக்கூடிய மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆர்.டி. திரிபாடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தண்டனை ஏதும் இல்லாமல் தப்பிவிட்டது வருத்தம் தருகிறது.

பயங்கரவாதிகளைக் கொன்றதாகக் காட்டிக்கொண்டால் பதவி உயர்வு, பாராட்டுப் பத்திரம், பண ஆதாயம் கிடைக்கும் என்பதற்காகக் காவல் துறையினர் திட்டமிட்டு இப்படிச் செய்திருப்பது மிகவும் அக்கிரமமானது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறையே இப்படி சொந்த ஆதாயத்துக்காகச் சதித் திட்டம் தீட்டி, திட்டமிட்டுப் படுகொலைகளைச் செய்வது வேலியே பயிரை மேய்வதைப் போலத்தான்.

சம்பவம் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்புள்ளவர் களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் அதிலும் மூத்த அதிகாரிகள் சிக்காமல் தப்பியிருப்பதும் மக்களிடையே காவல் துறை, நீதித் துறை நடவடிக்கைகள் மீது அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். இதில் தொடர்புள்ள மூத்த அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கும் கடும் தண்டனை விதிக்கப்பட்டால்தான் காவல் துறை, ராணுவத் துறையில் உள்ள அதிகாரிகள் எதிர்காலத்தில் இப்படியொரு முறையற்ற செயலில் ஈடுபடத் தயங்குவார்கள்.

SCROLL FOR NEXT