தலையங்கம்

புலிகள் பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை தேவை!

செய்திப்பிரிவு

கடந்த 6 ஆண்டுகளில் உலகில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது எனும் செய்தி மகிழ்ச்சி தருகிறது. உலக வன உயிர் நிதியம் மற்றும் சர்வதேசப் புலிகள் மன்றம் ஆகியவை இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2010-ல் இருந்ததைவிடப் புலிகளின் எண்ணிக்கை 600-க்கும் மேல் அதிகரித்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, 2010-ல் 3,200 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2015-ல் 3,890 ஆக அதிகரித்திருக்கிறது. புலிகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 3 நாள் கருத்தரங்கம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காடுகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவு எத்தனை முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் கடந்த காலத்தில் இந்தியா பல தவறுகளைச் செய்திருக்கிறது. அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பை மேற்கொள்வதில் இந்தியா முனைப்பு காட்டவில்லை. ராஜஸ்தானில் உள்ள சாரிஸ்கா புலிகள் காப்பகத்தில், பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததை அடுத்து, நிலைமையைப் புரிந்துகொண்ட அரசு, புலிகளின் கணக்கெடுப்பு முறைகளில் மாற்றம் கொண்டுவந்தது. நவீன தொழில்நுட்பம், புலிகளைப் புகைப்படம் எடுத்து அவற்றின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2014-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆக உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2010-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 1,706 ஆக இருந்தது. இந்தியாவில்தான் புலிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

புலிகளையும், அவற்றுக்கு உணவாகக் கூடிய விலங்குகளையும் பாதுகாப்பது, புலிகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் குறுக்கிடாத வகையில் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வது, சட்டவிரோதமாக நடக்கும் வேட்டையைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமே புலிகளின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தமிழகம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. அங்கு புலிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் சூழலை உறுதிசெய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரும்புகிறது. இதற்காக, ரூ.380 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

ஆட்கொல்லிப் புலி என்று காரணம்காட்டி, ராஜஸ்தானின் சஜ்ஜங்கர் விலங்கியல் பூங்காவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ‘உஸ்தாத்’ எனும் புலி தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. ராஜஸ்தானின் ரணதம்பூர் புலிகள் காப்பகத்தில் வனக் காவலரை அந்தப் புலி கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், அந்தப் புலி ஆட்கொல்லி என்பதற்கான சரியான சான்றுகள் இன்னமும் கிடைக்கவில்லை. சமீபகாலமாக, புலிகளை அருகில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக, அவை வசிக்கும் இடங்களுக்கு அருகில் தங்கும் விடுதிகள் கட்டப்படுகின்றன. உஸ்தாத் புலி வசித்த இடத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

மேலும், மத்திய இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, வனப் பகுதிகளைப் பயன்படுத்தும் திட்டமும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இது புலிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வனஉயிர் ஆர்வலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். புலிகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் சுயசார்பு அறிவியல் நிறுவனங்களைப் பங்கேற்கச் செய்வதும், பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஆய்வுகளை நடத்துவதில் அதிகாரவர்க்கம் ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகளைக் களைவதும் அரசு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள். புலிகள் பாதுகாப்பில் வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். ஏனெனில், காடுகளில் புலிகளின் இருப்புதான், காடுகள் செழிப்பாக இருக்கின்றன என்பதற்கான ஆதாரம்!

SCROLL FOR NEXT