புவி வெப்பமடைவதைக் குறைப்பதற்கு உறுதியான நடவடிக் கைகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகிக் கணிசமான காலம் கடந்துவிட்டது. இந்நிலையில், அதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது, நியூயார்க்கில் ஏப்ரல் 22-ல் கையெழுத்தாகியிருக்கும் ஒப்பந்தம். புவி வெப்ப மயமாதல் தொடர்பாக டிசம்பர் மாதம் பாரீஸில் நடந்த மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி, 174 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. உலகம் தொழில்மயமாவதற்கு முன்னால் நிலவிய புவி வெப்ப நிலையைவிட 2 டிகிரி செல்சியஸ் குறைவு என்ற அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
புவி வெப்பம் அடைவது குறித்து பாரீஸ் மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது. பசுங்குடில் இல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு அறிவியல்பூர்வமாக ஆதாரங்கள் உள்ளனவா என்று பார்க்கப்பட்டது. வளரும் நாடுகளின் நடவடிக்கைகளால் புவி வெப்பம் அதிகமாகவில்லை என்பதால் இந்த ஒப்பந்த விதிகளை அமல் செய்யும்போது தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குக் கடுமையாகவும், வளரும் நாடுகளுக்கு ஓரளவு தாராளமாகவும் நியதிகளைத் தீர்மானிக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது.
ஒரு நாடு குறைந்த அளவே கரியுமில வாயுவை வெளியேற்றுகிறது என்றாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு உலகின் வேறு பகுதிக்காக இருக்கிறது. எனவே வளரும் நாடு, வளர்ந்த நாடு என்று பார்த்து நிபந்தனைகளை விதிப்பதாலும் பயன் ஏற்பட்டுவிடாது என்பதே உண்மை. உலக அளவில் பசுங்குடில் இல்ல வாயுக்களை வெளியிடுவதில் இந்தியாவின் பங்கு வெறும் 4.10% தான். ஆனால் புவி வெப்பத்தால் ஏற்படும் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் கடுமையான வறட்சி, வரலாறு காணாத மழை வெள்ளம் ஆகியவை இந்தியாவைக் கடுமையாகப் பாதிக்கின்றன.
இந்நிலையில், இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுவிட்டதால் பசுங்குடில் இல்ல வாயு வெளியேற்றத்தை 2020-க்குள் கணிசமாகக் குறைக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 2005 தொடங்கி 2010 வரையிலான காலத்தில் பசுங்குடில் இல்ல வாயு வெளியேற்றம் ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. அதே போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்தாக வேண்டும். மின்னுற்பத்தி, சாலைவழிப் போக்குவரத்து, அடித்தளக் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இதையொட்டிய வலுவான கொள்கை வகுக்கப்பட வேண்டும். நிலக்கரி மீதான கூடுதல் தீர்வையை இரட்டிப்பாக்கியது, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை மானியமின்றி பராமரிப்பது என்ற கொள்கைகள் வரவேற்கத் தக்கவை. ஆனால் இவற்றின் மூலம் திரட்டப்படும் தொகையைப் பசுமையைக் கூட்டும் மாற்று வழிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
பாரீஸ் உடன்பாட்டை உலக நாடுகளின் அரசுகள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். பிறகு அதை அமல் செய்வதற்கான நிதியைப் பணக்கார நாடுகள் அளிக்க வேண்டும். ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி டாலர்கள் இதற்குத் தேவை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் புவி வெப்பத்தைக் குறைப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க பெருந்தொகையை மானியமாக வழங்க வேண்டும். பசுமைத் தொழில்நுட்பங்களைத் தங்களுடைய பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் உலகுக்கு வழங்க வேண்டும். புவி வெப்பமடைவதை ஒரு சில நாடுகளால் மட்டும் தடுத்துவிட முடியாது. இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து எடுத்தாக வேண்டும்!