நீட் தேர்வின் காரணமாகக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற இயலாத நிலையைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசோடு ஒரு சட்ட யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. மருத்துவக் கல்விக்கு மாநில அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறு அளவிலேனும் வரலாறு, பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட மானிடவியல் துறைகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்பது முரண்பாடு. சமூக அளவிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியுள்ள சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் பொருட்செலவு இல்லாமல், உயர் கல்வி பெறுவதற்கான ஒரே வாய்ப்பாக அரசுக் கல்லூரிகளே விளங்குகின்றன.
மாவட்டங்கள்தோறும் புதிதாகத் தொடங்கப்பட்டுவரும் புதிய அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ஆகியவற்றால் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பெண் கல்வியில் ஒரு பெரும் மறுமலர்ச்சியே ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், அவ்வாறு அரசுக் கல்லூரிகளின் வழியே கலை, அறிவியல், வணிகவியல் துறைகளில் முதுநிலைப் பட்டங்களையும் ஆராய்ச்சிப் பட்டங்களையும் பெற்ற பெண்களுக்கு உயர் கல்வித் துறையில் உள்ள உடனடி பணிவாய்ப்பு என்பது, மிகக் குறைவான ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளராக வேலைபார்ப்பதாகத்தான் இருக்கிறது. ஆராய்ச்சிப் பணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் ஈடுபடுபவர்களுக்கு அரசு அளித்திருக்கும் ‘கௌரவம்’, குறைவான ஊதியமும் நிலையற்ற பணியும்தான் என்பது வேதனைக்குரியது.
உயர் கல்வி பெற்றவர்களின் கடைசி விருப்பமாகவே இன்று ஆசிரியர் பணி மாறியிருக்கிறது. ஆராய்ச்சிப் படிப்பில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் தங்களது உயர் கல்வித் துறைக் கனவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் எழுத்துத் தேர்வுகளைத் தவிர்த்து நேர்காணல் அடிப்படையில் நடைபெற்றுவரும் பேராசிரியர் நியமனங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இவையெல்லாம், நிச்சயமாக உயர் கல்வித் துறையின் தரத்திலும் எதிரொலிக்கவே செய்யும். அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை, எளியவர்களின் எதிர்காலக் கனவுகள் கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. உயர் கல்வித் துறையைத் தங்களது விருப்பமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியிருக்கிறது, அடிப்படைச் செலவுகளுக்கும் வழியற்றவர்களாக அல்லாடும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.
மாணவர் இயக்கத்திலிருந்து முகிழ்த்து எழுந்ததாக வரலாற்றுப் பெருமை பேசும் திராவிடக் கட்சிகள் இரண்டும் மாறி மாறி இந்நிலையை மேலும் மேலும் மோசமாக்கிவருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பத்தாண்டுகளைக் கடந்து இன்னமும் அதே நிலையில்தான் தொடர்கிறார்கள். அவர்களது ஊதியம் ரூ.10,000-லிருந்து இப்போது ரூ.20,000 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், அதுவும் மாதம்தோறும் உடனுக்குடன் கிடைப்பதில்லை. தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கை. உயர் கல்வித் துறைக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்ற வரலாற்றுப் பழியிலிருந்து விடுவித்துக்கொள்ள திமுகவுக்கு ஒரு வாய்ப்பு இது.