தலையங்கம்

பொருளாதார மீட்சிக்கு வழி என்ன?

செய்திப்பிரிவு

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சில முக்கியக் கேள்விகள் நம்மைக் குடைந்துகொண்டிருக்கின்றன. ‘இந்தியப் பொருளாதாரம் மீட்சி அடைகிறதா? பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி கூறியதுபோல் ‘நல்ல நாட்கள்’ வரத் தொடங்கிவிட்டனவா?’ என்ற விவாதங்கள் உண்மையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. அதேசமயம், சமீபகாலமாகச் சில துறைகளில் தோன்றும் அறிகுறிகளைவைத்து நல்ல நிலைமை ஏற்பட்டுவிட்டதாகக் கருதிவிடக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

முதலாவதாக, இந்தியத் தொழில்துறை உற்பத்தி அட்டவணை (ஐ.ஐ.பி.) பிப்ரவரி மாதத்தில் 2% அதிகரித்திருக்கிறது. அதற்கு முந்தைய 3 தொடர் மாதங்களில் சரிந்துவந்த வளர்ச்சி இப்போது உயர்ந்திருக்கிறது. நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 2.6% அளவுக்கு வளர்ச்சி இருக்கிறது. அதேசமயம் கடந்த ஆண்டு இருந்த 2.8%-ஐ விடக்குறைவு. கடந்த 10 ஆண்டுகளில் நிலவிய சராசரி வளர்ச்சியான 6%-ஐ விட மிகமிகக் குறைவு.

இரண்டாவதாக, நுகர்வோர் விலை அடிப்படையிலான குறியீட்டெண் மார்ச் மாதத்தில் 4.8% ஆக இருந்தது. அதற்கு முந்தைய மாதம் இருந்த 5%-ஐ விட சற்றே குறைவு. இந்தக் குறைவு அதிலும் உணவுப் பண்டங்களுக்கான விலையில் ஏற்பட்ட குறைவு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே. இதனால், நுகர்வோர் வேறு பயன்களுக்குச் செலவிட அதிகப் பணம் கிடைக்கும். ஆனால், விலைவாசி குறைவதால் வேறுவிதப் பாதிப்புகளும் பொருளாதாரத்துக்கு உண்டு. தேசத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியின் அளவு குறையும். தொழில் நிறுவனங்களுக்கு வருவாய் அதிகமாகாது. பணவீக்க விகிதம் குறைவாக இருந்தால் முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு என்ற மூன்றுமே சரியும்.

மூன்றாவதாக, இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தைச் சற்றே குறைத்திருப்பதுடன், கடன் வழங்குவதற்கு வசதியாக கூடுதல் நிதி வங்கிகளுக்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றுடன் அடித்தளக் கட்டமைப்புத் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்துள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும், புதிய தொழில்நுட்பம் - உற்பத்தி முறை மூலம் ரூ.25 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டுடன் புதிதாகத் தொழில் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்படுவதும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனையே உற்சாகப்படுத்தியிருக்கிறது. எனவேதான் இந்திய வளர்ச்சி அதிகரிப்பது நிச்சயம் என்று கூறியிருக்கிறார்.

தொழில் வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் தூண்டிவிட மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பலன் கொடுக்கச் சிறிதுகாலம் பிடிக்கும் என்றாலும், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 64% அளவுக்குப் பெய்யும் என்ற இந்திய வானிலைத் துறையின் கணிப்பும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்ற நம்பிக்கையும் நிச்சயம் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமாகவே இருக்கும்.

2015-16 நிதியாண்டில் தொழில்துறை 7.3% அளவுக்கும், சேவைத் துறை 9.2% அளவுக்கும் வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேளாண் துறையில் வளர்ச்சி குறைந்து வெறும் 1.1% ஆகிவிட்டது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு விவசாயத் துறையின் பங்களிப்பு 17%தான் என்றாலும், கிராமங்களில் பணவோட்டம் குறைந்தால் இதர துறைகளிலும் சுணக்கம் ஏற்பட்டுவிடுகிறது என்பது அனுபவம். நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளர்களில் சரிபாதிப் பேர் வேளாண் துறையில்தான் இருக்கின்றனர்.

எனவேதான் தங்களுடைய விற்பனை, லாபம் அதிகரிக்க வேண்டும் என்றால், கிராமப்புறப் பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டும் என்று தொழில்துறையினர் விரும்புகின்றனர். பொருளாதாரம் மீட்சியடைய வேண்டும் என்றால், நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது எதற்கு என்பதை முடிவுசெய்ய வேண்டியது அவசியம்!

SCROLL FOR NEXT