2016-17-க்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டம், ஏழை - எளிய மக்களால் சமாளிக்க முடியாத அளவிலான மருத்துவச் செலவுகள் விஷயத்தில் அனைவருக்கும் மருத்துவ வசதியை வழங்கும் திட்டமாகவும் அமைந்திருக்கிறது.
மருத்துவச் செலவுகள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கித்தான் இருக்கிறது. இந்தச் சூழலில், ஏழ்மையில் வாடும் மக்களின் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் வகையிலான காப்பீட்டுப் பாதுகாப்பை இந்த பட்ஜெட் அளித்திருக்கிறது. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதியை தேசியத் திட்டம் மூலம் வழங்க இந்த பட்ஜெட் வழிவகை செய்திருக்கிறது.
பெரிய அளவிலான திட்டம் என்பதால், மருத்துவக் காப்பீட்டில் முன்னோடிகளாக விளங்கும் தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு. உலக வங்கியும் ஜப்பான் அரசும் 2011-ல் நடத்திய ஆய்வின்படி, தாய்லாந்தில் பொது வருமானங்கள் முதல் ஊதிய வரி அதிகரிப்பு வரை பயன்படுத்தியது, முறைப்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது நிரூபணமானது. சாத்தியமான அளவில் நிதி ஒதுக்குவது, மருத்துவத் திட்டங்கள் மூலம் தனியார் லாபம் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் கண்டிப்பான திட்டங்கள் மூலம் நிதியைக் கண்காணிப்பது எனும் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கவை. இந்தியாவில் உறுதியான கண்காணிப்பு இல்லாமல் சுகாதாரத் துறை பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் சூழலில் இவை முக்கியமானவை. மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சேர்க்கப்படும் ஏழைகளுக்கு அரசின் சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை வைத்து அறமில்லாமல் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதைத் தடுக்க இவை உதவும்.
வருடாந்திர சுகாதார பட்ஜெட் பெயரளவில் மட்டும் அதிகரிக்கப்படுவது, லாப நோக்கில் இயங்கும் மருத்துவ நிறுவனங்கள், தனியார் காப்பீடு போன்றவை அனைவருக்குமான சுகாதாரத் திட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடும். மருத்துவக் காப்பீடு அதிகச் செலவு பிடிக்கும் விஷயம் என்று கருதுவதால், 23 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் பலர் அதை வாங்க முன்வருவதில்லை என்று தெரியவந்திருக்கிறது. சந்தா மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் வரிகளிலிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி அனைவரையும் சென்றடையும் வகையிலும் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படும் வகையிலான சுகாதாரத் திட்டத்தை நோக்கி இந்தியா செல்ல வேண்டியது அவசியம். அத்துடன் சுகாதார நிதியைக் கடுமையான விதிமுறைகளுடன் கண்காணிப்பதும் முக்கியம்.
மாவட்ட மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவது, மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பது போன்றவையும் முக்கியமானவை. இந்தியாவில் ஆண்டு தோறும் 2.2 லட்சம் பேர் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்படும் சூழலில், நாட்டில் உள்ள சிறுநீரகவியல் நிபுணர்களின் எண்ணிக்கை 1,100 தான் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருக்கிறார். சிறுநீரகச் செயலிழப்பு முற்றிவிடும் நிலைக்குச் செல்லாமல் தடுப்பது, சிறுநீரகப் பரிசோதனைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மேற்கொள்வது போன்றவற்றின் அவசியத்தையும் இந்தப் புதிய திட்டம் உணர்த்தியிருக்கிறது. அனைவருக்கும் தரமான சுகாதார வசதிகளை அளிப்பதன் முக்கியத்துவத்தை அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் இனியும் புறக்கணிக்க முடியாது.