அண்மையில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சென்னை வந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துச் சென்றது, தேசிய அரசியலைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான, அதே நேரத்தில் காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி ஒன்றை அமைக்கும் அரசியல் வியூகத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு அமைந்திருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின்போதே, விவசாயிகளின் நலன்களை முதன்மைப்படுத்தி இப்படியொரு கூட்டணிக்கு சந்திரசேகர் ராவ் முயற்சித்தார் என்றாலும், அத்தேர்தலில் பாஜக அபார வெற்றியைப் பெற்ற பிறகு, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. இப்போது அவர் மீண்டும் காங்கிரஸும் பாஜகவும் அல்லாத புதிய கூட்டணிக்கான திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினைச் சந்தித்துத் திரும்பிய அடுத்த சில நாட்களில் சந்திரசேகர் ராவ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்துப் பெரும் போராட்டங்களை நடத்தத் தொடங்கியிருக்கிறார். நெல் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜகவுக்கு எதிராக அவர் இப்படி எந்தப் போராட்டத்தையும் நடத்தியவர் இல்லை என்பதால், தேசிய அரசியலின் மொத்தக் கவனமும் அவர் மீது குவிந்திருக்கிறது. அவர் தேடி வந்து சந்தித்திருக்கிறார் என்பதால், அந்தக் கவனம் ஸ்டாலின் மீதும் குவியத் தொடங்கியுள்ளது.
விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடும் சந்திரசேகர் ராவ், அண்மையில் தனது டெல்லி பயணத்தின்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைச் சந்திக்கவில்லை என்பதும் அரசியல் நோக்கர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. தெலங்கானா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத நிலையில், பழியை மத்திய அரசின் மீது சுமத்துகிறார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. மூன்றாவது அணியை உருவாக்க அவர் விரும்பும்பட்சத்தில், அதைத் தலைமையேற்று நடத்த விரும்புகிறாரா அல்லது வேறொரு தலைவரின் தலைமையின் கீழ் கூட்டணியை ஒருங்கிணைக்க விரும்புகிறாரா என்ற கேள்விக்கும் இதுவரையில் பதில் இல்லை. அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளுக்கேற்ப இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம்.
தமிழ்நாட்டில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் தொடர விரும்பும் திமுக, மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கவும் விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையில் பாஜகவை எதிர்ப்பது என்ற கருத்தொருமிப்பு எதிர்க்கட்சியிடம் வலுவாக உருவாகவில்லை. பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முனைப்புக் காட்டாதபட்சத்தில், திமுகவின் நிலைப்பாடு என்னவாகும் என்ற கேள்வி இயல்பானது. பாஜக எதிர்ப்புக்காகவே காங்கிரஸை திமுக ஆதரிக்கிறதேயல்லாமல், காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவை எதிர்க்கவில்லை. எனவே, சந்திரசேகர் ராவ் முன்னெடுக்கும் மூன்றாவது அணியில் திமுகவும் இணையுமா என்ற கேள்வி இயல்பானது. முடிவு திமுகவின் கைகளில்தான் இருக்கிறது.