இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை ஊட்டச்சத்துக் குறைவினால் வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லாமல், வலுவற்றும் ரத்தசோகை போன்றவற்றால் பீடிக்கப்பட்டும் இருப்பது ‘தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு’ தரவுகளிலிருந்து தெரியவருகிறது. நாட்டின் சரிபாதி மாநிலங்களில் இந்த நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், 2016-17 நிதிநிலை அறிக்கையில் குழந்தைகளின் நலனுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கீடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்திய மதிப்பீட்டுத் தொகையிலும் இப்போது 7% வெட்டப்பட்டிருக்கிறது. இப்போதைய ஒதுக்கீடு ரூ.14,000 கோடி. 2015-16-லும் இப்படித்தான் குறைக்கப்பட்டது. பிறகு, துணை நிலை நிதி அறிக்கையில் சிறிது கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
அடுத்த தலைமுறை இந்தியர்களின் நலனுக்கான ஒரு திட்டத்தில் இப்படி நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பது, எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் அரசுக்குள்ள மயக்கத்தை உணர்த்துகிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவருகிறது என்பது உண்மையானால், சமூக நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், ஏன் இப்படி நேர்கிறது?
கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்துள்ள உணவை உறுதிசெய்வது ஒரு சமூகக் கடமை. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்கும்போது அவர்கள் வயதுக்கேற்ற உயரம் பெறுவதைத் தொடர்ச்சியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளாக இருக்கும்போது அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் எதிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருப்பதுடன் கல்வி, விளையாட்டு, வேலை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முடிகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்குமே அவசியமானது.
பத்தாண்டுகளுக்கு முன்னால் எடுத்த கணக்கெடுப்பின்போது, 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் வெறும் 6% மட்டுமே சத்தான உணவைப் பெறுவது தெரியவந்தது. வளர்ந்த மாநிலங்கள் கொஞ்சம் கூடுதல் நிதி ஒதுக்கி இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுவிட்டன என்றாலும், பெரும்பாலான மாநிலங்களின் நிலை மோசம். குறிப்பாக, பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லாத குழந்தைகள் ஏராளம். மத்திய அரசின் மகளிர் - குழந்தைகள் நலத் துறை இம்மாநிலங்களின் மீது தனிக் கவனம் செலுத்தி இங்கெல்லாம் குழந்தைகளின் நலன் மேம்படுத்தப் படுவதற்கு உதவாவிட்டால், இந்தக் குழந்தைகளுக்கு விமோசனமே கிடையாது.
இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகள் நலனுக்கு அதிக நிதி ஒதுக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லி தவறிவிட்டார் எனினும், இன்னும் காலம் இருக்கிறது. தனது தவற்றைத் திருத்திக்கொண்டு கூடுதல் நிதியை இதற்கென ஒதுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் குழந்தைகளின் வயது, எடை, உயரம், உடல் நிலை, நோய் எதிர்ப்புத் திறன் போன்றவை பதிவுசெய்யப்பட வேண்டும். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் அனுபவங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வழிகாட்ட வேண்டும். வரவுக்கேற்ப செலவைக் குறைக்கும் உத்தி பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டிய கடமைக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும்!