தலையங்கம்

அனைத்துக் கட்சிக் கூட்டம் தவறில்லை!

செய்திப்பிரிவு

காவிரி புகைய ஆரம்பித்துவிட்டது. பேசும் வாய்கள் மாறியிருக்கின்றன. குரல்கள் அப்படியே நீடிக்கின்றன. முன்பு காங்கிரஸ் இருந்த இடத்தில் இப்போது பா.ஜ.க. “இந்திய அரசியல் சட்டப்படி நடந்துகொள்வேன்; மக்களிடத்தில் வேறுபாடு காட்ட மாட்டேன்” என்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வது வெறும் சடங்குதான் என்பதை பா.ஜ.க-வினரின் வார்த்தைகள் இன்னொரு முறை உணர்த்துகின்றன.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை வாரியம் தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியதாகவும் அதற்கு பிரதமர் ஆவன செய்வதாக உறுதி அளித் ததாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தப் புகைச்சல் தொடங்கியது. இப்படி ஒரு செய்தி வெளியான உடனேயே உரம் மற்றும் ரசாயனத் துறைக்கான மத்திய அமைச்சர் அனந்தகுமார், “தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது போன்ற எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. மத்திய அரசு ஒருபோதும் கர்நாடகத்துக்கும் கர்நாடக மக்களுக்கும் எதிராகச் செயல்படாது” என்றார். தொடர்ந்து, கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் பிரகலாத் ஜோஷி, இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியிடம் தான் பேசியதாகவும் அப்போது அவர் ‘அத்தகைய சுற்றறிக்கை எதையும் பிரதமர் அலுவலகம் அனுப்பவில்லை. அப்படி வந்தாலும், கர்நாடக பா.ஜ.க. தலைவர்களை ஆலோசிக்காமல் நடவடிக்கை எடுக்க மாட்டேன்’ என்று கூறியதாகவும் தெரிவித்தார். கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் இறங்கினார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. உச்சபட்சமாக, காங்கிரஸைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் கூடாது என்ற கோரிக்கையுடன் அனைத்துக் கட்சிக் குழுவுடன் மோடியைச் சந்திக்கிறார்.

ஆக, கர்நாடகத்தில் ஒருமித்த குரல் ஒலிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, “தமிழக அரசும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று கூறியிருப்பது மிக நியாயமானது. முதல்வர் ஜெயலலிதா, “இந்த விஷயத்தில் தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து இருப்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான தேவை இல்லை” என்று கூறியிருப்பது ஏற்கத் தக்கது அல்ல.

காவிரி மேலாண்மை வாரியம் என்பது தமிழகத்துக்குச் சாதகமான நடவடிக்கை அல்ல. உண்மையில், காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் அடிப்

படை நியாயங்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை. கடந்த முறையும் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், இந்த முறையும் திறந்துவிட தண்ணீர் இல்லை என்பது ஆயிரக் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தமிழகத்தின் உணவாதாரத்தையும் பாதிக்கும் பிரச்சினை.

அனைத்துக் கட்சிக் கூட்டமானது சர்வ கட்சிகளின் சந்திப்பு மட்டும் அல்ல, அது ஒரு குறியீடு. மாநில விவகாரத்தில் ஒருமித்து நிற்கிறோம், எங்களுடைய உரிமை விவகாரங்களில் சமரசத்துக்கோ, இருவேறு கருத்துகளுக்கோ இடம் இல்லை என்பதை உணர்த்தும் வெளிப்பாடு. மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் பிரதமரும் நடுநிலையோடு செயல்படுவதற்குத் தரப்படும் தார்மீக அழுத்தம். அனைவரும் ஒரே கருத்தைக்கொண்டிருக்கும் சூழலில், அதை ஒரே குரலில் உரத்து ஒலிப்பதில் என்ன தவறு? முதல்வரே… அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுங்கள். ஒன்றுபட்ட குரலையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ​

SCROLL FOR NEXT