சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் தம்பதியினருக்குப் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பது பற்றியும் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சமீபத்தில் அளித்துள்ள வழிகாட்டும் தீர்ப்பு முற்போக்கு முகாமில் வரவேற்பைப் பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 பேர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் (ஹரி எ. உத்தர பிரதேச அரசு) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பெண்ணும் இரண்டு ஆண்களும் கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஊரின் சாதியக் கட்டுப்பாடும் அக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளது. கீழமை நீதிமன்ற விசாரணைகளில் சில சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறினர். விசாரணைகளில் ஏற்படும் கால தாமதங்களும் இதற்கு முக்கியமான காரணம். இந்நிலையில், நீதிமன்ற விசாரணையில் சாட்சிகள் பிறழ்ந்தாலும் அவர்களது முந்தைய வாக்குமூலங்களின் உண்மைத்தன்மையைத் தவிர்க்க வேண்டியதில்லை என்ற வழிகாட்டலை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கும்பல் கொலைகளில், சதியை நிரூபிப்பது தொடர்பிலான சட்ட விளக்கங்களும் இத்தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ளன.
ஆணவக் கொலை தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை அரசுகள் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிவுறுத்தல்களில் முக்கியமானது, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. ராஜஸ்தான் அரசு 2019-ல் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை இயற்றியுள்ளது. தமிழ்நாடும் அதைப் பின்பற்றி தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டோருக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் இதே கருத்தை முன்பு வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 2021 பிப்ரவரியில் லக்ஷ்மிபாய் சந்தாரகி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், நன்கு படித்திருக்கிற ஆணும் பெண்ணும் பழைமையான சமூக முறைகளைப் புறந்தள்ளிவிட்டு, முற்போக்கு சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்வதால் சமூகப் பதற்றம் தணிவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சுறுத்தலைச் சந்திப்பதால் நீதிமன்றங்கள் முன்வந்து துணைநிற்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தீர்ப்பில், சாதிகளுக்கு இடையிலான திருமணமே சாதியை ஒழிக்க வழி என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கருத்தை அவரது ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலிலிருந்து உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டியிருந்தது.
உ.பி. ஆணவக் கொலை வழக்கில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் சாதியை ‘அழித்தொழிக்க’ முடியவில்லையே என்று வருந்தியுள்ள நீதிமன்றம், மீண்டும் ஒரு முறை அம்பேத்கரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகேனும் மாநில அரசுகள் இவ்விஷயத்தில் உரிய அக்கறையைக் காட்ட வேண்டும்.