போக்குவரத்தின்போது மக்கள் இறப்பது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். தொற்றுநோய், புற்றுநோய் போல ஏராளமான உயிர்களை ஆண்டுதோறும் பலிவாங்கும் காரணியாகவே இந்தியப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையைப் போல 15 அல்லது 20 மடங்கு மக்கள் காயம் அடைகின்றனர்.
இவர்களுக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், படுகாயம், வேலை செய்ய முடியாமல் ஏற்படும் வேலையிழப்பு நாட்கள் போன்றவற்றைக் கணக்கிட்டால், நம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3% அளவுக்கு சாலை விபத்துகளால் மட்டும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலை இப்படியே தொடரவிடக் கூடாது என்று தேசியப் போக்குவரத்துக் கொள்கைக் குழுவை வகுக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். விபத்துகளைக் குறைக்க உத்திகளை வகுக்க, தேசிய அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியச் சாலைகளின் தரம், வாகன ஓட்டுநர்களின் திறன், சாலைகளில் ஓடும் வாகனங்களின் வயது மற்றும் தகுதி என்று பல அம்சங்கள் விபத்துகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன. விபத்துகளைப் பதிவுசெய்யும் காவல் துறை அவற்றை ஆய்வு செய்வதோ, விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகளைக் காண்பதோ இல்லை. 2014-15-ல் இந்தியாவில் புதிதாக 2 கோடி வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டன. இரு சக்கர மோட்டார் வாகனங்கள்தான் அதிகம். அடுத்த அபாயம் 20 லட்சம் கார், வேன்கள்.
பல நகரங்களில் நெரிசல் நேரங்களில் நகரக்கூட முடியாத அளவுக்குத் தனியார் வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமிக்கின்றன. நகர்ப்புறக் காற்றில் கந்தகம் கலந்த கரியமில வாயு அதிகரிப்பதுடன், குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமலும், போக்குவரத்தைத் தொடர முடியாமலும் கோடிக்கணக்கில் பணம் விரயமாகிறது.
இதைக் கருத்தில் கொண்டே 2016-17 மத்திய நிதிநிலை அறிக்கையில் பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேருந்துப் போக்குவரத்தில் ஏராளமான புதியவர்கள் ஈடுபட வசதியாக மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது.
பொதுவாக, முறைப்படுத்தல் என்றாலே அதை முட்டுக்கட்டை யாகவும் தடையாகவும் அணுகுவதே நம் இயல்பு. இந்நிலை மாற வேண்டும். இந்தத் துறையில் எவருக்கும் ஏகபோக உரிமை இல்லாமல், நேர்மையான போட்டி ஏற்பட வழிவகுக்க வேண்டும். அவரவர் பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். சாலைவழி, ரயில்வழி, நீர்வழி என அனைத்து வழிப் போக்குவரத்து அங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இந்தியச் சாலைகளில் பொதுப் போக்குவரத்தை விரும்புபவர் களும்கூட அதைப் பெரிதும் பயன்படுத்துவதில்லை. காரணம், பொதுப் போக்குவரத்து மோசமானதாக இருப்பதுதான். எப்படியாவது வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களை வதைக்கும் வாகனங்களாகப் பொதுப் போக்குவரத்து வாகனங்களை மாற்றியிருக்கின்றனர் ஆட்சியாளர்கள்.
தனியார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது என்பது பொதுப் போக்குவரத்தை நாம் எந்த அளவுக்கு சவுகரியமானதாக மாற்றுகிறோம் என்பதை அடிப்படையாகக்கொண்டே தொடங்குகிறது. தனியார் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் தனி. பொதுப் போக்குவரத்துக் கொள்கையைச் சீரமைக்கும்போது பயணிகளின் நலன், பாதுகாப்பு போன்றவற்றுக்கும் உத்தரவாதம் வேண்டும். விபத்தில்லாப் போக்குவரத்தே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும்!