தலையங்கம்

ஒமைக்ரான் பரவல்: முகக்கவசம் தொடரட்டும்!

செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டுவரும் நேரத்தில், அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் படுவேகமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஒமைக்ரான் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பரவலின் பாதிப்புகள் குறித்துப் பதற்றம்கொள்ளத் தேவையில்லை எனினும் பரவல் வேகமானது கவலைக்கும் எச்சரிக்கைக்கும் உரியதாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த சிலரிடம் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுணர்வு வேண்டியிருக்கிறது. கரோனா தொற்றிலிருந்தும் அதன் தொடர் விளைவுகளிலிருந்தும் உலகம் முழுவதுமாக வெளியே வந்துவிடவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. மேலும் சில மாதங்களுக்கும்கூட இந்நிலை தொடரக் கூடும். வைரஸ் தொற்றுகள் உருமாறிப் புதுப் புது வடிவங்களை எடுக்கும் இயல்பு கொண்டவை என்பதால், இன்னும் கொஞ்சம் காலத்துக்கு முகக்கவசமும் சமூக இடைவெளியும் தொடர வேண்டியது அவசியம்.

காலந்தோறும் பெருந்தொற்றுகளால் பாதிக்கப்படுவதும் மீண்டெழுவதும் மனித வரலாறாகவே இருந்துவருகிறது. முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் நாம் வாழும் காலத்தின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகள், தொற்றுகளைக் கண்டறியவும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தேடிக்கொள்ளவும் வாய்ப்பளித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இன்றைய உலகமயக் காலம் தொற்று பரவுவதற்கு எப்படி ஒரு வாய்ப்பாக இருக்கிறதோ அதுபோலத் தொற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா தொற்று காரணமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்ட பொதுமுடக்கம் சமூக, பொருளாதார அளவில் கடும் விளைவுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது. அன்றாட வாழ்க்கை முறையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது தலைமுறையில் அனுபவிக்காத புதிய சவாலைச் சந்தித்து மீண்டுவந்திருக்கிறோம். அதிலிருந்து கிடைத்த பாடங்கள் அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பாடமாகக் கொள்ளத்தக்கவை.

உலகின் எங்கோ ஒரு மூலையில் கண்டறியப்படும் தொற்று, விரைவில் உலகெங்கும் பரவுவதற்கான வாய்ப்புகளுடனே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவ்வாறு கண்டறியப்படும் தொற்றுகள் பரவும்பட்சத்தில், அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது மக்களின் கைகளிலேயே உள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் தேவையான முன்னெச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் அளித்துவருகிறது. அரசுகளும் அவற்றைச் செயல்படுத்துகின்றன. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பும் அவசியமானது.

தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வதும் தனிமைப்படுத்திக்கொள்வதும் அவசியம். பெரும் எண்ணிக்கையிலான பொதுக் கூடுகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. இயன்ற இடங்களிலெல்லாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அதற்கு வாய்ப்பில்லாதபோது முகக்கவசம் அணிந்துகொள்ளும் வழக்கத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதுமே உருமாறிய தொற்றுகளிலிருந்து பாதுகாப்பை அளிக்கும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அபராதங்கள் குறித்த அச்சங்களைக் காட்டிலும் சுய விழிப்புணர்வே முக்கியமானது.

SCROLL FOR NEXT