தலையங்கம்

திரைப்படச் சர்ச்சைகளால் கவனம் பெற முயலும் சாதிய அரசியல்

செய்திப்பிரிவு

காவல் துறை விசாரணையின் சித்ரவதைக் கொடுமைகளால் உயிரிழக்க நேர்ந்த அப்பாவி ஒருவர் தொடர்பான வழக்கின் அடிப்படையில், சமீபத்தில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் எல்லாத் தரப்பினரிடத்திலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மிசா காலகட்டத்தில் சிறையில் தானும் அவ்வாறு சிறைக் கொடுமைகளை அனுபவித்ததை நினைவுகூர்ந்துள்ளார். காவல் துறையின் இருள், வெளிச்சம் இரண்டையும் அறிந்த அவர், இப்போது அத்துறையின் அமைச்சர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய விசாரணையில் தந்தை-மகன் இறந்ததை அடுத்து காவல் துறை சித்ரவதைகளைத் தடுக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார் திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி. காவல் துறையின் மனித உரிமை மீறல்களால் முன்பொரு காலத்தில் பாதிக்கப்பட்டதை நினைவுகூரும் தமிழ்நாடு முதல்வர், தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய அதிகார வரம்பு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதாக எழுந்த விமர்சனங்களை அடுத்து, அக்காட்சி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. எவ்வித உள்நோக்கமும் இன்றி அக்காட்சி வடிவமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டும் உள்ளது. சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் முதன்மைக் கதாபாத்திரத்தின் அலுவலக அறைச் சுவரும் மேஜைப் பொருட்களும் அரசியல் குறியீடுகளாகச் சித்தரிக்கப்படுகையில், எதிர்மறைப் பாத்திரங்களின் காட்சிப் பின்னணியும் அவ்வாறே குறியீடுகளாகக் கொள்ளப்படும் என்பது இயல்பானதுதான்.

சமூகத்தில் மனமாற்றங்களையும் அரசின் நடவடிக்கைகளில் சீர்திருத்தங்களையும் கோருகிற ஒரு திரைப்படத்தின் காட்சியமைப்புகள் மிகுந்த கவனத்தோடு அமைய வேண்டும் என்ற எச்சரிக்கையை இது உணர்த்துகிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரப்படுத்தும்போது, வழக்கறிஞரின் பெயரைப் போலவே காவல் நிலைய அதிகாரியின் இயற்பெயரையும் ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வியிலும் நியாயம் உண்டு.

சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினர், எல்லா வகையிலும் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதையும் விசாரணையின் பெயரிலான சித்ரவதைக் கொடுமைகளையும் காட்சிப்படுத்தியிருப்பதன் வாயிலாக, அது குறித்த மக்களின் கவனத்தையும் அரசின் கவனத்தையும் ஒருசேர ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஈர்த்துள்ளது. இத்தகைய தவறுகளை இழைப்போரிடம் ஆழ்ந்த குற்றவுணர்ச்சியை அது உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. விவாதங்கள் அனைத்தும் இந்த முதன்மைப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்க வேண்டும்.

ஆனால், மக்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது. சாதிய உணர்வுடன் இயங்கும் சில அமைப்புகள், வெற்றிப் படங்களையொட்டி எழுகின்ற கவனம் தங்களின் மீதும் பட வேண்டும் என்று விரும்புகின்றன. இன்று விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் திரைப்படத்தின் பெயர், அம்பேத்கரியர்களின் முழக்கம் என்பதும் அம்பேத்கரைத் தங்களது கொள்கை வழிகாட்டும் மூன்று தலைவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்ட கட்சிதான் இந்தத் திரைப்படத்தை எதிர்க்கிறது என்பதும் காலத்தின் முரண். இது போன்ற சர்ச்சைகளெல்லாம் திரைப்படங்களுக்குப் பெரிய விளம்பரமாக மாறிவிடுகிறது என்பதை எதிர்ப்பாளர்கள் மறந்துவிடக் கூடாது.

SCROLL FOR NEXT