முல்லைப் பெரியாறு அணை இந்த ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்தே அது குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அணை திறக்கப்பட்டபோது, கேரள அமைச்சர் மட்டும் அங்கே இருந்ததால், கேரளம் தன்னிச்சையாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதா என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, பேபி அணையில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதித்ததற்காக கேரள அரசுக்குத் தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதமும் சர்ச்சைக்குள்ளானது. அவ்வாறு தாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை என்று கேரள வனத் துறை அமைச்சர் மறுத்துவிட்டார். இது குறித்த கேள்விகளுக்குத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாடு அதிகாரிகள்தான் தண்ணீரைத் திறந்துவிட்டனர் என்றும் கேரள வனத் துறை அதிகாரிகள் அளித்த அனுமதியைச் சுட்டிக்காட்டி அமைச்சருக்குத் தெரியாமல் எப்படி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், தமிழ்நாடு முதல்வரிடமிருந்து இவ்வளவு அவசரமாக நன்றிக் கடிதம் எழுதப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி தொடரவே செய்கிறது.
துரைமுருகன் இந்த விளக்கங்களை அளித்த அதே நேரத்தில், முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக்கொடுப்பதாக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஐந்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி, நீர் தேக்கும் அளவைக் குறைப்பதற்கு கேரள அரசு முயற்சித்தபோது, தங்களது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களால்தான் தற்போது 142 அடி நீர் தேக்கும் உரிமையைப் பெற்றுள்ளோம் என்கிறது அதிமுக. அந்தச் சட்டப் போராட்டத்தில் தமக்கும் பங்குண்டு என்கிறது திமுக. தமிழ்நாட்டை அடுத்தடுத்து ஆண்டுவரும் இந்த இரு பெரும் கட்சிகளும் மாநிலங்களுக்கு இடையிலான நீர் உரிமைகளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவை.
பக்கத்து மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் மாறினாலும் நீர்ப் பகிர்வு தொடர்பில் அவை கருத்தொருமிப்புடன் நடந்துகொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒன்றுக்கொன்று குற்றஞ்சாட்டிக்கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கின்றன. ஐந்து மாவட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினை குறித்து, அரசின் விளக்கத்தை எதிர்பார்த்திருக்கையில், நீர்வளத் துறை அமைச்சர் தனது வழக்கமான நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அதைக் கையாள்வது ஆச்சரியமளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரையில் நீரைத் தேக்கிக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்கிறார் நீர்வளத் துறை அமைச்சர். ஆனால், அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க அளவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது கேரளம். இவ்விஷயத்தில், தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது காலத்தின் அவசியம். நீர் உரிமைக்கான நெடும் போராட்டத்தில் ஒருமனதாக முடிவுகளை எடுக்க அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுக்களை நிரந்தரமாக அமைப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்.