சென்னை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. சென்னையின் பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், கனமழையும் நீடித்தால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் மேலும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டி முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் களத்தில் நிற்கிறார்கள். முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட்டுள்ளார். மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் ஆளும் திமுகவைக் குற்றம்சாட்டினாலும்கூட கொளத்தூர் சென்றதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்று உறுதிபட மறுத்துள்ளார். பெருமழையின் பாதிப்புகளால் மக்கள் துயருற்றிருக்கும் வேளையில், கட்சி அரசியல் பேசுவது தவறு என்ற உள்ளுணர்வு கட்சித் தலைவர்கள் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், சமூக ஊடகங்களில் உலவிவரும் பெருமழை குறித்த அரசியல் கேலிச் சித்திரங்கள், தலைவர்களின் அந்த எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருத்தத்துக்குரியது. அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணிகள் இன்னும் சட்டமன்றத் தேர்தல் மனோநிலையிலிருந்து வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை, அடுத்து வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிவிட்டனவோ என்னவோ.
தண்ணீர் தேங்கி நிற்பதால் தலைநகரிலேயே சில இடங்களில் மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளைத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலிருந்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இல்லை. வானொலி மற்றும் இணையவழிச் செய்திகளும், சமூக ஊடகப் பகிர்வுகளுமே அவர்களது பிரதான செய்தி ஊடகங்களாக இருக்கின்றன. பெருமழை போன்ற இயற்கை இடர்களின்போது சமூக ஊடகங்களால் உள்ளூர் அளவில் திறம்மிக்க தகவல் பரிமாற்ற ஊடகங்களாகச் செயல்பட முடியும். 2015-ல் சென்னைப் பெருவெள்ள மீட்பு நடவடிக்கைகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டங்களிலும் சமூக ஊடகங்களின் வல்லமையை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். பெருமழைக் காலங்களிலும் அத்தகைய ஒரு ஒருங்கிணைப்பு பயனுள்ளதாக அமையும்.
கட்சி வேறுபாடுகளை மறந்து வாய்ப்புள்ள அனைவரும் தன்னார்வலர்களாகக் களமிறங்க வேண்டிய நேரம் இது. அனைத்துக் கட்சித் தலைவர்களுமே தங்களது தொண்டர்களுக்கு இதே வேண்டுகோளைத்தான் விடுத்திருக்கிறார்கள். அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கும் உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவோருக்கும் விரைந்து உதவிகள் செய்யப் பகுதிவாரியாகத் தன்னார்வலர்களைக் கொண்ட குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அரசு அலுவலர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக அவர்கள் செயல்பட வேண்டும். கட்சிகளின் மீதும் தலைவர்கள் மீதும் வெறுப்பைக் கக்கும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் பெருமழைக்காலத்திலாவது ஓயட்டும்.